பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

121


எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள் இமயம் முதல் குமரி வரையிலும்-பரந்து கிடக்கும் பாரதப் பூமியில் பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைய பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, செயல் வேறுபட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு என்பது ஒரு கலை; ஒரு நோன்பு. அகத்தில் ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில் - இறை நலப்படைப்பில் ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதுதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்ட சராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண் பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும் ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல. ஒற்றுமை என்பது தற்காலிகமான கூட்டுச்சேர்க்கை அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம்; நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையை விட ஒருமைப்பாடு மிகமிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவன் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறான். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அவன் வாக்கு.


ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து