பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

123


பாரத நாடு விடுதலை பெற்றுப் பல ஆண்டுகளாயின. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒருவருடைய அல்லது எந்தவோர் இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு. ஆயினும் பாரதநாட்டில் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலன்களுக்குக் கேடு விளைவிப்பதாயின் அது நலனேயன்று, தீமையேயாம். நன்மை, நன்மையைத் தோற்று விக்குமே தவிரத் தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி - மற்றும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி - மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆதலால்தான், தேசிய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறார்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்கள் அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், போர்க்கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும் ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரதநாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப் பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக்கூறும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியவையல்ல. அதீத மானவைகளுமல்ல.

சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை எடுத்துக் கூறியுள்ளார். புலால் உண்ணாமை