பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள் நெறிகண்ட புதுமைச் சமுதாயம்; பொதுமைச் சமுதாயம்.

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நூல். திருக்குறள் போன்ற ஒரு முழுதுறழ் அறநூலைத் தரத் தகுதியுடையதாக வாழ்ந்த இனம் தமிழினம். அறிவுக்கும், அனுபவத்திற்கும், நெறிவழி உணர்விற்கும் வழி வழித் தொடர்பு அதாவது பாரம்பரியம் உண்டு என்ற கருத்து வரலாற்றாசிரியர் உலகத்துக்கு உடன்பட்டதேயாம். திருக்குறள் தோன்றிய காலத்தில், தோன்றிய சமுதாய இலக்கியங்களை ஒரு கண்ணோட்டம் செலுத்திப் பார்த்தால் கிரேக்க நாட்டு நாகரிகம் ஒன்றே அண்மித்து வருகிறது. திருக்குறளுக்கு எவ்வளவு பெருமையுண்டோ அதைப்போல நூறு மடங்கு பெருமை அதன் ஆசிரியருக்கு உண்டு. அத்தகைய பெருமைசான்ற நூலாசிரியனை ஈன்று புறந்தந்து வளர்த்த பெற்றோருக்கும், அளவற்ற பெருமையுண்டு. ஆனாலும் தமிழர்தம் சீலமும் சிறப்பும் தாங்கப் பொறாதார் திருவள்ளுவர் வரலாறு பற்றிய தவறான கதைகளைக் கட்டி விட்டிருக்கின்றனர். ஐயகோ, என்னே அறியாமை! தமிழர்தம் அறிவு நுட்பத் திறனும், ஒழுக்கச் சார்பு ஆர்வமும் வேறு எந்த இனத்திற்கும் இல்லை. ஆயினும், போற்றி வளர்க்கும் திறன் இன்மையின் காரணமாகப், பலபொழுது இந்த இயல்புகள் ஒளிபெற்று விளங்குவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழினம் புகழ்பெற்று வாழ்ந்த இனம். அந்தப் புகழ்மிக்க இனமே தமிழர்தம் தனிமறையும் உலகத்தின் பொதுமறையுமாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் வாயிலாகத் தந்தது.

திருக்குறள் கவிதை நூல்; காவியம், பண்பு நலம் காட்டும் காப்பியம்; இனிய நூல்; எளிய நூல்; காலத்தை வென்று நிற்கும் திருநூல், அறநூல்; முழுதுறழ் அறநூல், காதல் நூல்; கடவுள் நூல்; வாழ்விக்கும் மறை, வையகத்தை