பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

131


அதுபோல ஆள்வினையொடு தொடர்புபடாத வாழ்க்கை பயன் தராதது மட்டுமின்றிப் பயனை அழிக்கும்; பழியும் சேர்க்கும். ஒரு தலைமுறைக்கன்று ஏழேழ் தலைமுறைக்கும் ஆள்வினையற்றவன் துறவியாக வேண்டும். நாம் இங்குக் குறிப்பிடுவது இன்றையத் துறவிகளையன்று. விழைவும், வேண்டுவனவும் இல்லாத துறவே துறவு. இன்றோ விழைவிலும் விருப்பத்திலும் நாட்டிலுள்ளோர்க்கும், துறவிகளுக்கு மிடையே போட்டி வைத்தால் துறவிகளே வெற்றி பெறுவர். இவர் தம்மையும். திருவள்ளுவர் கண்டிக்கின்றார். ‘துவரத் துறவாதார் துறவு உப்புக்கும் காடிக்கும் கூற்று'. துவரத் துறவாத துறவின் காரணமாகவே நம்முடைய நாட்டில் துறவி வடிவத்தில் பிச்சைக்காரர்கள் தோன்றினர். மேலும், அதனால்தானே துறவு அமைப்பில் நிலப்பிரபுத்வ அமைப்பைப் பின்னணியாகக் கொண்ட நிறுவனங்கள் தோன்றின. ஆதலால், ஆள்வினை போற்றுதல் தலையாய கடமை. ஆள்வினையற்றோர் உண்ணுதற்கும் உரிமையற்றோர். அப்படியே உண்டால், அதனை ‘உண்ணல்’ என்ற சொல்லுக்குப்பதில் ‘தீனி தின்பது’ என்றே கூறலாம். மீண்டும் மீண்டும் வள்ளுவர் ஆணை மறவன்மின் ஆள்வினை போற்றுமின்!

பொருள்

இன்று - இன்று மட்டுமன்று, என்றுமே - வாழ்க்கை யென்ற நடைப்பயணத்திற்குப் பொருள் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மனித வரலாற்றில் தொடர்ந்து பாத்திரம் வகித்து வருவது இந்தப் பொருளேயாம். மனிதனின் படைப்பே பொருள். ஆனாலும் ஆச்சரியம், அந்தப் பொருள் அவனுக்கே எஜமானனாகி விடுகிறது! மகன் தந்தைக்குத் தந்தையாகி விடுவதில்லை. ஆனால், பொருளுக்கு மட்டும் இது விதி விலக்கு. பொருள் என்பது, பல பொருளைத் தருகின்ற ஒரு சொல். ஆனால், இன்று