பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனப்பகை ஒடுங்கும். போர் முனை அருள் முனையாகும். இந்த மண்ணகம் விண்ணகம் ஆகும்; உலகின் மனித குல ஒருமை உறுதியாகும்.

அருள் நெறி

திருக்குறள் எல்லாச் சமயங்களும் ஏற்றுப் போற்றக் கூடிய பொதுமறையாக விளங்குகிறது. கடவுளை நம்பாத உலகாயதவாதிகள் உட்பட திருக்குறளை நம்புகிறார்கள். உயர்ந்த சமய நெறியின் இயல்பு, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதுதானே! வேறுபாடுகளைக் காட்டிக் காழ்ப்பையும் கலகத்தையும் உருவாக்குகிற ஒன்று, நிறைவான சிறந்த சமயமாக இருக்க முடியாது. திருக்குறள் காட்டும் சமயம் வேறுபாடுகளைக் கடந்த சமயம். தத்துவ சீலங்களால் உயர்ந்து காட்டுதல் என்பது வேறு; தாக்கித் தாழ்த்தி உயர்தல் என்பது வேறு. திருக்குறள் சமய நெறி மிகவுயர்ந்த சமய நெறி. திருக்குறளை மையமாகக் கொண்ட சமய இயக்கமொன்றைத் தொடங்கியிருந்தால் உலகப் பொதுச் சமயம் தோன்றியிருக்கும். கடந்த காலத்தில் அதைச் செய்யத் தவறியது, பொதுவாக உலகத்துக்கும் சிறப்பாகத் தமிழகத்திற்கும் இழப்பேயாம். இனி எதிர் காலத்திலாவது திருக்குறள் சமய இயக்கம் தோன்ற முயலுவோமாக.

முடிப்புரை

திருக்குறள் வாழ்க்கை நூல். அது ஒரு தனிமனிதனை அறிவூட்டி, உணர்வூட்டி, ஆள்வினை கூட்டி, அன்பில் தோய்த்து, வேண்டுவன தந்து, ஒழுக்க நெறியில் செலுத்தி, அருள் நெறியில் நிற்கச் செய்து வளர்த்து வாழ்விக்கிறது. திருக்குறள் மனித சமுதாயத்தை இறைநெறியில் நிறுத்தி, முறைமையில் முறைப்படுத்தி, நடுவு நிலைமையில் நடை பயிலச் செய்து, உயர்நெறியாம் ஒப்புரவில் ஒழுகச் செய்துகடலுக்குப் புயலும், புயலுக்குக் கடலும் போல. தனி மனிதனோடு உறவு கொண்டு வளர்த்துத் தன்னையும் வளர்க்கிறது.