பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமை இல்லை” என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.


உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.


உள்ள முடைமை உடைமை பொருளுடைமை}}
நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றிச் சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல். ஏன்? பொருளியலே உலகியலும்கூட “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று பிறிதொரு கருத்துக்கு இட மின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றைய சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாகத் துய்த்து நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். துய்த்து நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? பொருள் என்பது துய்த்தற் குரியவைகளையே. “யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல” என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து உணர்த்துவது உணரத் தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும்.