பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்கள் மூலதனமாக வளர்ச்சியடைகின்ற வரையில் காக்கப் பெறுதல் வேண்டும். பின் முறையான பங்கீடு அல்லது விநியோக முறை வேண்டும். இன்றைய நம்முடைய பொருளாதாரத்தில், உள்ள சிக்கல் பெரும்பாலும் முறையான பங்கீடு இன்மையேயாகும். இவ்வளவு தெளிவாகப் பொருளியலைக் கண்டுணர்த்திய திருக்குறளில் பெருமைக்கீடுண்டோ!

சமுதாய உறவு

திருக்குறள் தனி மனிதனைச் சமுதாயப் பொது மனிதனாக வளர்ப்பதில் நிறைய அக்கரை காட்டுகிறது. அவனுடைய சமுதாய உறவுகளை வளர்ப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் திருக்குறள் முழுக்கவனம் செலுத்துகிறது. தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய நல்லுறவைத் தடுத்துக் கெடுக்கும் தடைகளைப் பற்றியும் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இந்த உறவினை வளர்த்துக் கட்டிக் காப்பதற்காகப் பலப்பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். மற்றவர்களைச் சார்ந்து நலம் செய்து வாழ்வதால், கேடுவருமாயினும் ஏற்றுக்கொள் என்று ஆணையிடுகிறார்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பது திருக்குறள்,

மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைப் பண்பிற்குச் சிறந்த பங்குண்டு. ஆனால், பொறையுடைமை என்பதை இன்று பலர் கருதுகிற பார்வையில் திருவள்ளுவர் கருதவில்லை. கோழைத்தனத்தினாலும் அச்சத்தினாலும் பொறுத்தாற்றுதலுக்குத் திருவள்ளுவர் உடன்படார். பொறையுடைமை என்றே ஓர் அதிகாரம் செய்துள்ளார். அதில் மிகவும் சிறந்த திருக்குறள்,