பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவருடைய சமயம் உலகியலில் அழுந்துவது மன்று; அப்பாற்பட்டதுமன்று. இவர் வாழ்த்தும் கடவுள், கோலம் குறிகளுக்கு அப்பாற் பட்டவர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; தனக்குவமை இல்லாத தலைவர். இத்தகு தூய “அருள் நெறியே” இந்த நூற்றாண்டிற்கும் ஏன் இனிவரும் நூற்றாண்டு களுக்கும் ஏற்ற நெறியாகும்.

திருக்குறளும் தமிழ் இனமும்

தமிழினம் முன்னர்க் குறிப்பிட்டது போலக் கடந்த கால வரலாற்றுச் சிறப்புடையதாயினும் இடைக்காலத்தில் அதற்கேற்பட்ட வீழ்ச்சி மறைக்கவோ மறக்கவோ முடியாத ஒன்று. பிறமொழி நுழைவு தமிழின் தூய்மையைக் கெடுத்தது. ஆயினும் சிறந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழின் துய்மையைக் காப்பாற்றி வந்தனர். அயலினத்தாரின் நுழைவால் ஓரினமாக வாழ்ந்த தமிழினம் பலநூறு சாதிகளாகப் பிரிக்கப்பெற்றது. தமிழினத்தையே சார்ந்த ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினரிடம் ஓரினம் என்ற அடிப்படையை மறந்து காழ்ப்புக் கொண்டனர்; பகை பாராட்டினர். இந்த இன்னாத சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு வளர்ந்த தமிழினம், நாளையும் கோளையும் அவ்வழிப்பட்ட அதிட்டத்தையும் நம்பத் தலைப்பட்டது, ஊழையும் உப்பக்கம் காணும் கொள்கை கண்ட இனம் “தலைவிதி” என்ற தத்துவத்தின் தாளடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சி யுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த, இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயற்சித்து வந்துள்ளனர்-வருகின்றனர்.