பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

157


செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப்பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்புந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக் கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனித குலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத் துறைகளில் நடைமுறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது மட்டுமன்று கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக்கொள்ள வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசு, திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது. இது, நன்றி உணர்வுடன் என்று பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்யவேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணி செய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழனத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி. கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நாம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப் போமாக.

வாழ்க தமிழ்! வாழ்க வள்ளுவம்!