பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதனை, ஏன் இனிமேல் தோன்றக்கூடிய சமுதாயத்தையும் கூட உருக்குலைத்து அழிக்கக்கூடிய அணுக் கருவிகளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

வாழும் மானிட சாதியை மருந்தெனக்காக்கும் அரசியலில் காழ்ப்புணர்ச்சிகள், கொலை வெறிகள்! இவற்றின் விளைவாக இயற்கையன்னையின் கொடைகளாக விளங்கும் காற்றும் தண்ணீரும்கூட கலப்படமாகும் கொடுமை! ஊர்களை, நாடுகளை, கண்டங்களை, அண்டங்களைச் சாலைகள் இணைந்து வெற்றி பெற்று விட்டன.

ஆனால், மனித நெஞ்சங்களை இணைப்பதில் நன்னெறிகள் வெற்றி பெறவில்லை. அதன் காரணமாகப் புறத்தே பொற் குவியல்கள் தோன்றினாலும் அகத்தே அமைதியில்லை. காற்றினும் கடிது செல்லும் விமானத்தில் உலகைச் சுற்றி வந்தாலும் உள்ளத்தில் உறவு நெறிகளைக் காணோம்! அன்பு கூர்ந்து இத்தகு நெறியல்லா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி இடுமின் உலக ஒப்புரவு நெறி கொண்டு ஒழுகுமின்!

            அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
            விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
            அணைத்துக்கொள்! உன்னைச் சங்கம மாக்கு?
            மானிட சமுத்திரம் நானென்று கூவு!
            பிரிவில்லை, எங்கும் பேத மில்லை!
            உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்!
            புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது!
            புவியை நடத்து பொதுவில் நடத்து

என்று பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன புதுமையும் பொதுமையும் நிறைந்த நெறியினை நடைமுறைப்படுத்துமின்! அன்பு நெறி தழைக்கும்.

     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர் பிறர்க்கு.