பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அலட்சியப்படுத்த தக்கனவும் அல்ல. இவைகள் கருவிகள்; வாயில்கள்! இவற்றின் பயனை வாழும் உலகம் எடுத்துக் கொள்ளுதலுக்கே அறிவு என்று பெயர்.

இத்தகு அறிவு முறையாகத் தலைப்படின் துன்பங்கள் தொடர் கதைகளாக முடியாது. என்றோ கேட்ட 'நல்ல தங்காள்' கதையைப் போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெறுகின்றனவென்றால், "நல்ல தங்காள் கதை"யின் கருப்பொருள், நம்முடைய கவனத்திற்கு வரவில்லை. ஆதலால் நல்லதங்காள் கதையின் நிகழ்வுக்குக் காரணமாக அமைந்த சமுதாய அமைப்பை மாற்றும் பணியை, ஒழுக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதனால், நமது நாட்டில் எந்தத் துன்பங்களும் தொடர் கதைகளாக வருவனவே தவிர, சிறுகதைகளாகக் கூட மாறவில்லை. ஏன்? சமுதாயச் சிக்கல்களை; துன்பத்தை நாம் கருதும் மனப்பாங்கில் தவறு இருக்கிறது; அணுகும் முறையில் அறிவுப் பாங்கு இல்லை.

"இப்படித்தான் இருக்கும்” என்ற முடிவிலேயே நமது வாழ்க்கைப் பயணத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம். ஏன் இப்படித்தான் இருக்கவேண்டும்? இப்படி இருக்கக்கூடாதா? என்ற வளர்ச்சியின் முதல் நிலை வினாவைக்கூடகேட்கும் நிலையில் நாம் வளர்க்கப்படவில்லை; வளர விரும்பவில்லை. சென்றகாலம் என்பதே நிகழ்காலம், எதிர்காலம் என்ற மயக்கத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். அதன் காரணமாக நேற்றைய அறிவு அப்படியே முடம்பட்டுக்கிடக்கிறது.

முடவர்கள் ஓடியாடித் திரிய முடியாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே புலம்புவதைப் போலச் சென்றகால அறிவினின்று வளர்ந்து அறிதோறும் அறியாமை என்ற வள்ளுவத்திற்கு இலக்கணம் படைக்க நமக்கு உயிர்த் துடிப்பில்லாததால் சென்றகால அறிவிலேயே முடம்பட்டு அதற்குப் பதவுரை, பொழிப்புரை சொல்லிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறோம்.