பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறியாமையேகூட சில சமயங்களில் அறிவு என நம்பப்படுகிறது. சில சமயங்களில் அரைகுறை அறிவுகூட ஆர்ப்பாட்டம் செய்கிறது! அறிவு முற்றாக அறியாமையினின்றும் விடுதலை பெற்றுத் துன்பத் தொடக்கு இல்லாததாக இருக்கவேண்டும். அதுவே தூய்மையான அறிவு. தூய்மையான அறிவு விவகாரம் செய்யாது; அழிக்காது! ஆனால் ஒயாது தொழிற்பட்டுக் கொண்டிருக்கும்! ஏன்? தூய்மையான அறிவுக்குக் குறைகளும் அவ்வழி நேரும் துன்பங்களும் சற்றும் உடன்பட்டு வாரா. ஆதலால், இவைகளை எதிர்த்துத் தூய்மையான அறிவு போராடும். போராடுதல் என்றால் சண்டை போடுதலன்று! உழைப்பு வேள்வியில் ஈடுபடுதல்.

தாள், உழைப்பின் சின்னம். ஆதலால், உழைப்பையே தாள் என்று உருவகப்படுத்திக் கூறுதல் புலனெறி வழக்கம். சில உழைப்புகள் பயன் தரா. பயன் தராதது மட்டுமின்றித் துன்பத்தையும் தரக்கூடும். ஆதலால், உழைத்தால் மட்டும் போதாது. அது நல்ல உழைப்பாக இருக்க வேண்டும். கடவுளின் உழைப்பு நல்ல உழைப்பு. சாதாரண நன்மையல்ல. மிக மிக உயர்ந்த நன்மை, தற்சார்பும் தன்னலமும் இல்லாத உழைப்பு. "தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர்” என்னும் புறநானூற்றை அறிக!

கடவுள் தூய்மையான அறிவினன்; நல்லுழைப்பினன். இங்ஙனம் விளங்கும் வாலறிவனின் நற்றாளைத் தொழுதல் என்பது, அத்தூய அறிவினை எண்ணிச் சிந்தித்தல் மூலம் தூய்மையான அறிவினைப் பெறுதல். நற்றாள் தொழுதல் என்பது, அத்தகைய "உயிர்க்குலம் காக்கும் நல்லுழைப்பினை வழிபாடாக இயற்றுதல்"-என்பது கருத்து.

கற்றல், உயிர் விளக்க முறுதலுக்காக! உயிர் விளக்கமுறுதல் என்றால் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதல். கல்வியின் பயன், அறிவு பெறுதல்; அறியாமை நீங்குதல்;