பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தான் திருவள்ளுவர் "எனைத்தாலும் நல்லவை கேட்க!” என்றார்.

உயிரை வளர்ப்பது நல்ல கல்வி, நல்ல கல்வியின் பயன் தூயஅறிவு.தூய அறிவின் பயன் ஆக்கத்தினை, இன்பத்தினை வழங்கும் நல்லுழைப்பு. இவை இறைவன் நாமத்தைக் கற்றலாலும் அவனுடைய பொருள் சேர் புகழைக் கேட்பதாலும் கிடைக்கும். எங்கும் தூய்மையான அறிவு வளர்வதாக! நாடெங்கும் நல்ல உழைப்பு வேள்வி வளர்வதாக! வையகம் துயர் தீர்வதாக! இதுவே வள்ளுவம் கடவுளை வாழ்த்தும் வாழ்த்து!

             கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
             நற்றாள் தொழாஅர் எனின்.

திருக்குறள் நெறி

திருக்குறள், உலகப் பொதுமறை. மனித குலத்தை மையமாகக் கொண்ட வாழ்வியல் திருமறை. திருக்குறள், பொதுமை நோக்குடையது. திருக்குறள் காட்டும் நெறி, வேற்றுமைகளைக் கடந்த நெறி; ஒருமைப்பாட்டு நெறி.

திருக்குறள் கடவுள் நம்பிக்கை அருமையானது; எளிமையானது. தனக்குவமை இல்லாத ஒருவனே கடவுள். அவன் வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன்; தூய அறிவினன்; அறத்தின் திருவுருவம். திருக்குறள் காட்டும் கடவுள் வழிபாட்டு நெறி, கடவுளைச் சிந்தனை செய்தல், இடைவிடாது நினைத்தல் என்ற அளவினதேயாம்.

திருக்குறள் நெறி காதல் வழி உருவாகும் இல்லற வாழ்க்கையேயாம். இல்லற வாழ்க்கையின் சிறப்பு முழுவதும் இல்லத்துக்குரியவளாகிய பெண்ணாலேயே அமைகிறது.