பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பேணுதலும், விருந்தினரை உபசரித்தலும் அடங்குகின்றன. ஒரு தலைமகன் பொருள் ஈட்டுவதின் மூலம் அரசுக்கு வரி செலுத்தி, அரசைப் பாதுகாக்கின்றான். தன் குடும்பத்தையும் சுற்றத்தாரையும் பேணிப் பாதுக்காக்கின்றான். திருக்குறள் காட்டும் ஒப்புரவு நெறி கட்டாயம் இல்லாமல் இயல்பான நிலையில் "ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற சமுதாயப் பொதுமையைப் படிமுறையில் தோற்றுவித்து வாழும் இயல்புடையது. குறள் காட்டும் ஒப்புரவுநெறி உலகப் பொதுநெறி, சமநிலைச் சமுதாயம் அமைக்கத் துணை செய்யும்.

உயிர்க் குலத்தை வாழ்விக்கும் அன்பே குறள்காட்டும் வாழ்வு. அன்புநெறி வாழ்விக்கும், அறம் இன்பஅன்பினை நல்கும்.

திருக்குறள் நெறி அருமையானது; எளிமையானது. எல்லாருக்கும் ஏற்றது; வாழ்வாங்கு வாழத் துணை செய்வது.

இறையியல் வாழ்க்கை

வாழப் பிறந்தது மானிட சாதி மானிடப் பிறப்பின் குறிக்கோள் சாவதன்று வாழ்வதுதான்! அதுவும் மண்ணகத்தில் வாழ வேண்டும். பெறுவன பெற்று, துய்ப்பன துய்த்து வாழ வேண்டும். அதனால்தானே மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில்- வாழ்வாங்கு வாழ வழி காட்டும் நூலில் காமத்துப் பாலும் கூறுகிறார்! அது மட்டுமா? "தாமரைக் கண்ணன் உலகத்து இன்பத்தைவிட காதலின்பம் உயர்ந்தது" என்பது திருக்குறள் கருத்து.

அதனால், தாமரைக் கண்ணன் உலகத்து இன்பத்தைக் கொச்சைப் படுத்துதல் என்பது பொருளன்று! திருக்குறள் தோன்றிய காலச் சூழ்நிலையில் இவ்வுலக வாழ்க்கையை, பொருள் வாழ்க்கையை, காதலின்ப வாழ்க்கையைக்