பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

171



நிலமிசை நெடுநாள் வாழ்வாங்கு இன்புற்று வாழ வழி என்ன? நிறைநல மிக்க கடவுள் திருவடிகளை நினைப்பற நினைத்தல், நீள நினைத்தல்! அவ்வழி கடவுள் நலன்களைப் பெற்று, உரிமையுடைய உடைமைகளாக்கிக் கொள்ளுதல்; அவ்வழி ஒழுகுதல். இதுவே வள்ளுவம் உணர்த்தும் இறையியல் சார்ந்த வாழ்க்கை!

            மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்
            நிலமிசை நீடுவாழ் வார்.

            பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
            நெறிநின்றார் நீடுவாழ் வார்.


வேண்டுதலும் வேண்டாமையும்


உயிர், இன்பம் துய்த்து வாழவே விரும்புகிறது. ஆனால், நிகழ்வு பெரும்பாலும் இதற்கு மறுதலையாகவே உள்ளது. துன்பங்களே மிகுந்து வருகின்றன. ஏன்? உயிர் ஆசைகளால் அலைப்புறுவது. அப்படியானால், வாழ எண்ணுதல் தவறா? என்று கேட்கத் தோன்றும்! வாழத்தான் வாழ்க்கை! இன்புற்றமர்ந்து வாழத்தான் வாழ்க்கை! வாழ்வாங்கு வாழ்தல் வேறு; ஆசைப்பட்டு அழிதல் வேறு !

ஆசையென்பது முற்றாகச் சார்புடையது! தன்னலமே நாடுவது! மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதது. ஆசை யுடையவர்கள், மற்றவர்கள் எல்லோரும் தனக்குக் கடமைப் பட்டிருப்பதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் கனவிலும்கூட மற்றவர்களுக்குக் கடமைப்பட்ருப்பதாக நினைக்கமாட்டார்கள்! இதைத்தானே கென்னடி கூறினார். "நாடு உனக்கு என்ன செய்தது என்று நினைக்க வேண்டாம். நீ, நாட்டுக்கு என்ன செய்தாய் என்று நினைப்பாயாக!"