பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று! இந்த வார்த்தைகள் தோன்றுவதற்குரிய சூழ்நிலை உலகில் அமைந்திருந்தது என்பது கருத்து.

எதிலும் ஆர்வம் காட்டலாம். ஆனால், ஆசை கூடாது. ஆர்வம் வேறு! ஆசை வேறு. ஆசை மிகவும் கொச்சைத்தனமானது. ஆசையுடையவன், எல்லாம் தனக்கே என்பான்! மற்றவர்களை ஒதுக்கியே வாழ்வான்! அல்லது ஒத்துப் போகமாட்டான்; வேற்றுமைகளுக்கும் சண்டைகளுக்கும் காரணமாக அமைவான்! ஆயிரம் "நொண்டிக் காரண"ங்களைக் கூறுவான்! ஆயிரம் நன்மைகள் செய்த ஒருவர், ஒரு நன்மை செய்யத் தவறிவிட்டால் அவன் பொறுக்க மாட்டான்! செருக்கித் திரிவான்! ஆனாலும் நிர்வாணமாகத் திரிவான்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்;
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்

என்றார், திருமூலர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து

என்றார் திருவள்ளுவர்.

ஆர்வம் என்பது சிந்தனையின்பாற்பட்டது. வளர்ச்சித் தன்மையுடையது. ஆர்வமுடையவர்கள் கூடியே வாழ்வர். எந்த நிலையிலும் ஒத்துழைத்தலேயே விரும்புவர்; வேற்றுமை பாராட்டமாட்டார்கள். இத்தகு ஆர்வம் இருந்தால் அன்பு இருக்கும். அன்பு, ஆர்வத்தை மேன்மேலும் வளர்க்கும். அன்புக்கும் ஆர்வத்துக்கும் காரணங்கள் கிடையாது, எல்லைகளும் கிடையாது. பொதுவாக மனித குலத்தை வருத்தும் துன்பங்களுக்குக் காரணம் வேண்டுதல், வேண்டாமை என்பனவேயாம்.

இன்று, யாண்டும் வேண்டுதலும் உள்ளது; வேண்டாமையும் உள்ளது. நம்முடைய வழிவழிப் பழக்கங்களில்கூட