பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூளங்களோடு சேர்ந்து எரியுமானால் எளிதில் அனைத்தற்கியலாது.

அதுபோல, அறிவிலும் உணர்விலும் வலிமையற்ற குப்பையனைய மனிதர் அவாவழிப்படின் வெகுளி என்ற எரிவழிப்படுவர். இத்தகையோரின் வெகுளி வெளிப்படின். ஒட்டுக் கேட்பர்; ஒற்றறிய முனைவர்; சிறுமை தூற்றுவர், ஏன்? 'ஒரு கை பார்ப்போமே!” என்று முனைந்து நிற்பர். அவ்வழி சிறுமை செய்வர். பெருமைக்கும் சிறுமை செய்வர். ஆதலால், வெகுளிவழிப் பொருதல்-போராடுதல் தீது.

வாழ்க்கையில் வளம்காண விரும்புவோர் தமது பொறிகளோடும், புலன்களோடும் ஓயாது போராடுவர்; புன் னெறியினின்றும் விலகுவர்; நன்னெறியில் நிற்பர்; அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபடுபவர்; வளம்பல படைப்பர் வையத்து வாழ்வாங்கு வாழ்வர். அன்னவர், தீயோர் இகலிப் பொருது வந்தாலும் ஒதுங்குவர். அவரொடு பொருத ஒருப்படார். வறிதே பொருதின் வளம்கெடும்; வாழ்க்கை பாழாகும்; இம்மையும் மறுமையும் கெடும்.

வளம்சேர வாழ நினைப்போர் இகல்வரினும் ஏற்றுக் கொள்ளார். வெகுளுதலும், அவ்வழி இகலுதலும் ஆக்கம் தரா இழப்பையே நல்கும். ஆக்கம் வேண்டின் இகலுதலைத் தவிர்த்திடுக! இகலி வருவோரையும் ஆற்றுதல் செய்க!

விரைந்து வெகுண்டு இகலுதல் பகையைத் தோற்று விக்கும், ஆதலால், வெகுளுதல் தவிர்த்திடுக! பொருந்தா வழி இகலிவருவோரையும் வாழும் இயல்பு அறிந்து பொறுத் தாற்றிடுக! இதுவே வள்ளுவர் காட்டும் வாழும் வழி!

ஒருவர் விரைந்து வெகுளுகின்றார்-இகலிச் சாடுகின்றார் என்றாலே, அவர் விரைந்து கெடுகின்றார் என்பது பொருள் ஒரு பொருள் விண்நோக்கி ஏறும்பொழுது அப்பொருளில் ஆட்டம் மிகுதியாக இருக்காது. அதே பொருள் இறங்கி வரும் பொழுது மிகுதியாக ஆடும்.