பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4



அறவழி காட்டி

வள்ளுவன் புகழ்பாடி வண்டமிழ் வளர்க்கின்ற இந்தத் தமிழ்க் கூட்டத்தினரிடையே. தமிழ் மதுரை என்று சொல்லுகிறபொழுதே நம்மையுமறியாது நம் உள்ளங்களில் ஒரு மகிழ்ச்சி எழுகிறது. இந்த மதுரையம்பதியின்கண்ணே நீரும் நெருப்புங்கூடத் தமிழ்ச்சுவை யறியும், அறிந்திருந்தது என்று வரலாறு பேசும். இத்தகைய மதுரைம்பதியில் வாழ்ந்து வளர்கின்ற உங்கள் தமிழ்ப்பற்றுக்கு வரையறை சொல்ல முடியாது. என்று தமிழ் மதுரை காண்பேம் என்றுதான் பேசுகிறார் பெரும்புலவர். மாணிக்கவாசகப் பெருந் தகையார் ஆண்டவனை நோக்கி "கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்று பாடுகிறார். இதைச் சொல்லுகிற பொழுது நமது உள்ளம் இனிக்கின்றது.

அறப்பெருஞ் செல்வர் வள்ளுவர் தமிழகத்திலே பிறந்தார் என்ற காரணத்தினால் அவரைத் தமிழர் என்று கூறுகின்றோம்; ஆனால் அவர்நோக்கம், அவர் நூல், அவர் இலட்சியம் அனைத்தும் உலகத்தைச் சார்ந்திருந்தமையால் உலகப்பெரும் புலவராக அவர் காட்சியளிக்கிறார். அதனால் தான் பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து