பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதற்கு வள்ளுவர் மாளிகையை இந்நகரில் எடுக்க அருணையாதீனச்சார்பில் ரூபாய் ஆயிரத்தொன்று கொடுக்க முற்படுகின்றோம். இந்தப் பணியை நல்லமுறையில் முன்னின்று தொடங்குகின்றபொழுது நாமும் அன்பர்களும் வந்து இப்பணியை முற்றுவிக்க முற்படுகின்றோம். தமிழோடு மட்டு மன்று—சைவம் வளர்த்த, மதுரை என்று எண்ணுகின்ற பொழுது தமிழ்தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்ச் சங்கம் இருந்த மதுரை என்றுதான் பாராட்டுகின்றோம். அந்தத் தமிழ்ச் சங்கத்தை இன்று இந்தக்கோவிலில் வைத்து விட்டோம். பிற நாட்டு யாத்திரீகர்கள் இந்நாட்டிற்கு வந்தால் எங்கள் நாட்டிற் பிறந்த வள்ளுவரின் மாளிகை இது என்று காட்ட வேண்டும். மாணிக்கவாசகருடைய அருள் மாளிகையை எழுப்பும் பணியைக் காலத்தில் நிறைவேற்றத் திருவருள் துணைபுரியும் என்று நம்புகின்றோம். இந்த நிலையில் ஒன்றேயொன்று மட்டும் நினைவுபடுத்திப் பின்னே சில செய்திகளைச் சொல்லிப் பேச்சை முடித்துக் கொள்ளுகின்றோம். இந்த ரூபாய் ஆயிரத்தொன்றையும் இப்பொழுதே கழகத் தலைவரிடம் ஒப்படைக்கின்றோம். மாளிகை எழுப்ப நமது பெயரால் அப்படியே பாங்கில் போட்டு விடட்டும்; பின்னர் எடுத்துக்கொள்ளட்டும். பணி நடக்கின்ற காலத்தில் அன்பர்களிடத்திற் சொல்லி வேண்டுவன செய்யத் தயாராக இருக்கின்றோம்.

இனி திருவள்ளுவரின் நூல், வாழ்க்கை நூல் என்று பன்முறையும் சொல்லிவந்தது பற்றி ஒரு சிறிது விளக்குவோம். வள்ளுவர் நல்வாழ்வுக்கு எடுத்துக்காட்டும் அடிப்படையான கருத்துக்கள் இரண்டை நினைவுபடுத்த ஆசைப்படு கின்றோம். அவர் காட்டும் வழியைக் கூர்ந்து நோக்குங்கள். ஒன்று அன்பு மற்றொன்று தூய்மை. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளையும் துருவித் துருவிப் படித்துவந்தீர்களானால் அவர் சொல்லும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்கள் இந்த இரண்டும்தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.