பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இது கோபமா இல்லையா? கோபம் கொடிது என்று சொல்லுகிற திருவள்ளுவர் கோபப்படுகிறார். துறவிகளைப் பற்றிப் பேசும்பொழுது,

     
        தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
        வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

என்கிறார்.

திருவள்ளுவரை முன்னின்று பார்ப்போமாயின் அவர் கோபமுடையவர் என்பது தெரியும். தவமறைந் தல்லவை செய்தல் தமிழகத்தின் பண்பாட்டுக்குப் புறம்பான வாழ்க்கை, அதைப்பார்த்தபோது அவருள்ளம் கொதித்திருக்கிறது. கொதித்த உள்ளத்திலிருந்து அந்தச் சொற்கள் வந்திருக்கின்றன. அறத்திற்கு மாறுபட்டவர்களைக் கண்டபோது ஒறுக்கவேண்டும் என்ற உணர்ச்சி அவருக்கு இருந்தது. அதனாற்றான்,

          மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
          பழித்த தொழித்து விடின்

என்று கூறுகின்றார். இச்சொற்களை யெல்லாம் கோப நிலையில் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார். இவற்றை யெண்ணுகின்றபொழுது வள்ளுவரின் உயிர்நாடிஅவருடைய அடிப்படை யெண்ணம் வேறொன்றின்கண் இருந்ததென்று சொல்ல முடியாது. அன்பு, அறம், தூய்மை இவை மூன்றும் வாழ்க்கையின் அடிப்படை என்று அவர் கண்டார். இந்த மூன்றில் ஒன்று இல்லாது போனாலும் அது வாழ்க்கையன்று என்பது வள்ளுவர் கருத்து.

 
         விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
         தீமை புரிந்தொழுகு வார்

என்ற குறளில் உயிரோடிருந்தாலுங்கட விளிந்தார் கூட்டத்துடன் சேர்க்கத் தக்கவர் என்று பேசுகிறார்.