பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




          நலத்தின்கண் நாரின்மை தோன்றி னவனைக்
          குலத்தின்கண் ஐயப் படும்.

ஆகையால் நம்மிடத்தில் குறையிருக்குமானால் தமிழ்க் குலத்திற்கே இழிவு வந்துவிடும். ஆகையால் தமிழ்ப் பண்பாட் டிலே நெறியிலே வாழாதவர்கள் தமிழ் மகன் என்று சொல்லிக் கொள்ளாமலாவது இருக்கட்டும். ஏன்? தமிழ்க் குலத்தின்கண்ணே பலரும் ஐயப்பாடு கொண்டு விடுவார்கள். இவைகளை யெல்லாம் நாம் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்த உலகத்தைப் பார்க்கிற பொழுதெல்லாம் வள்ளுவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். ஒன்றுபோல் தோன்றும் கருத்தை இரண்டொரு விடத்திற் சொல்லுகிறார்.

        எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும், மற்றொரு இடத்தில்,

        எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும் கூறுகிறார்.

இந்த இரண்டுக்கும் வேற்றுமை இருக்கத் தானே வேண்டும்? இந்தக் குறளின் நோக்கம் வேறு. அந்தக் குறளின் நோக்கம் வேறு. ஆனால் உரையாசிரியர்கள் சிலர் ஒரே பொருள்தான் காட்டுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் "கோச்சேரமான் யானைக்கட்சேய், மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற மேற்கோள் காட்டுகிறார். இது அவ்வளவு சிறப்புடைத்துத்தானா என்று கூறல் வேண்டும். எத்தன்மைத் தாயினும் என்ற இடத்தில் "பொருளின் தன்மைப் பாட்டிலே வைத்து இந்த வுலகத்தில் காணுகின்ற, உணர்கின்ற, அனுபவிக்கின்ற பொருள் எது? நிலைத்த இன்பம் தருவது எது? அப்படியில்லாதவை எவை? என்று