பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

197


கொண்ட நாட்டில் இன்று நாம் இப்படியெல்லாம் வாழ்கின்றோம். இந்த நிலையால் பிறருக்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டும். சமய வாழ்க்கை சொல்லுகிறபடி இந்த நினைவு வரவேண்டும். தவஞ் செய்கின்ற முனிவர் பெருமக்களாலே நாம் எல்லாப் பயன்களையும் பெறுகின்றோம் என்ற கருத்தைக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் இக்கருத்துக்குச் சிறிது சுற்றிவர வேண்டும். இவ்வாறு சொல்வதுதான் முறையென்று கருதுகின்றோம். உரையாசிரியர்கள் உரையைப் புரட்டுவதற்குள் மூலத்தைப்படித்து இக்கருத்தை உணர்ந்து கொள்ளலாம். சிலர் பலராகிய காரணம் என்ற குறளுக்கு வருகின்றோம். பலர் சிலரா வதற்குக் காரணம் தவஞ்செய்யு முனிவர் சிலராயிருத்தலே; நோலாதவர் பலராய் இருத்தலே என்ற கருத்தை விளக்குவது அக்குறள்.

தவஞ்செய்யு முனிவர் பெருமக்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் எண்ணம் சிந்தனையெல்லாம் சிலராகிய எல்லா மக்களுக்கும் சிறப்புடைய வாழ்வு கிடைக்கச் செய்யும். அப்படியில்லாத காரணத்தினால்தான் இல்லாதவர் பலராகிறார்கள். இப்படிச் சொல்வதற்கு வள்ளுவரே இடந்தருகின்றார். துறந்தார்தான் முதலில் பேணத்தக்கவர் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இல்லறத்தார் கடமையை வற்புறுத்துகின்றவிடத்தில்,


          துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்
          இல்வாழ்வான் என்பான் துணை

என்று போற்றிச் சொல்லியிருக்கிறார். அவர்கள் தவத்தின் காரணமாக, அன்பு நிலையின் காரணமாகத்தான் இங்ங்ணம் கூறினார். இத்தகைய முனிவர் எங்கேனும் கன்னி முனையில் இருந்தால் மதுரையில் உள்ளார் யாது செய்ய முடியும்? ஆகையால் மதுரையிலே இரண்டொருவர் இருத்தல் வேண்டும். மற்றவூர்களில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்!