பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்து, கீழ்மை நிலைமையிலிருந்து பைய மேல்நிலைக்குக் கொண்டு வந்து, பின்பு வாழ்வெனும் மையலாகிய சுழலிலிருந்து நேரான இன்ப அன்பு நிலைக்குக் கொண்டு வந்து அருளுவதை 'அ' என்ற எழுத்தை எடுத்துக் காட்டியதன் மூலம் உய்த்துணரலாம். இறைவனுக்குத் தனது நாட்டமில்லை. உயிர்கள் மீதே நாட்டம். அஃது பற்றற்ற நாட்டம். ஆதலால், இறைவன் பெருநெருப்பு. நெருப்பு மாசினை நீக்கும். ஆனால் நெருப்பு மாசுபடாது. அதுபோல இறைவன் குற்றங்கள் பலவுடைய உயிர்களோடு ஒன்றாவான்; உடனாவான்; உடன் பயிலுவான். ஆயினும் மாசுபட மாட்டான். இங்ஙனம் விருப்பும் வெறுப்புமற்ற இறைவனை வாழ்த்தி வணங்குதலின் மூலம் உயிர்களும் அத்தன்மையவாகித் துன்பத்தினின்றும் விடுதலை பெறும்.

இறைவன் மனமெனும் மலரில் பொருந்தி அமர்வான். ஆனால், பலருக்கு மனம் மலராக இல்லையே! மனத்தை மணம் பரப்பும் மலராக மலர்வித்துக் கொள்வதே வாழ்க்கையின் முயற்சி. இந்த முயற்சியே கடவுளை நாடும் வாழ்க்கை இங்ஙனம், திருவள்ளுவர் கருத்தால் உய்த்துணரும் கடவுளைக் காட்டியவர். உணர மறுப்பார்க்குப் புறச்சான் றாலும், உணர்த்துவான் வேண்டி மழையின் விழுமிய சிறப்பை எடுத்தோதுகின்றார். இளங்கோவடிகளும், 'மாமழை போற்றுதும்' என்று போற்றிப் பரவுவார். இயற்கை, இறைவனைப் படித்துணரும் பெரிய சுவடி என்பர் நல்லறிஞர். இறைவனே பெருமழை பெய்விக்கின்றான்; பெய்து காக்கின்றான் என்பதைத் திருஞானசம்பந்தர் 'பெய்தவன் பெருமழை உலகம் உய்யச் செய்தவன்' என்று பாடியுள்ளார். பெருமானிடம் பிரியாதிருந்து அருள் செய்யும் அன்னையின் அருளென்னப் பொழிகின்றது மழையென்று வாழ்த்துகிறது திருவாசகம். ஆதலால், இறைவனின் அருளிச் செயற்பாடுகளில் வான்மழையே விழுமியது. இம்மழையும் இறைவனைப் போலவே விருப்பு வெறுப்பு இன்மையும், மாறுபாடும் முரண்பாடுமின்றி எங்கணும் பெய்து நலன்