பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

217


நலமுண்டு. குறையும் நிறையும் கலந்த நலம் அழிவிலின்பத்தைத் தரமுடியாது. முழுநிறை நலமே அழிவிலின்பத்தைத் தரமுடியும்; ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பினைத் தரமுடியும். சோறு உண்டபொழுது பசியைத் தணிப்பது உண்மை. ஆயினும் அது அடியோடு பசியை மாற்றி மீண்டும் பசி தோன்றாமல் இருக்கச் செய்வதில்லை. அதுபோலவே உலகியல் இன்பங்கள் மீண்டும் மீண்டும் பசியை உண்டாக்குவன. திருவருள், இன்பப் பசியை மாற்றுவதோடு துன்பத்தின் தொடர்பையும் மாற்றும். இவ்வுயர்ந்த நெறியிலே நின்று கண்டு, கேட்டு, உண்டு, தேக்கெறிந்து வாழ்க்கையை வென்றவர்களே நீத்தார். அவர்கள் கடவுளைத் தம்மிடத்தே எழுந்தருளச் செய்து கொண்டவர்கள். அவர்கள் அருளிச் செய்யும் மொழிகள் மறைமொழிகள். இறைவன் அவர்களை இடமாகக் கொண்டு ஆடல் பல புரிகின்றான். அவர்கள் நெஞ்சத்தே நின்று உணர்த்தி உலகுக்கு உணர்த்த வைக்கின்றான். "எனதுரை தனதுரையாகக் கொண்டு நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலா” என்று திருமுறை பேசும். இவர்களே, நெறியல்லா நெறிதனை நெறியென நினைந்து வழி தவறி வாழ்க்கையில் இடறி வீழ்ந்து இன்பதுன்பச் சுழல்களில் சிக்கிச் சுழலும் உலகினருக்கு வழித்துணையாவர். இத்தகையோரே ஞானாசிரியர்கள்; ஞானாசிரியர்கள் தாயிற் சிறந்த பரிவுடையோர். தாதியிற் சிறந்த கனிவுடையோர்; நோய் நீக்குவர்; உயிர்க்கும் புகழ் சேர்ப்பர். இத்தகையோரே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்; நிறைமொழி மாந்தர்; குணமென்னும் குன்றேறி நின்றோராவர்; சித்தத்தால் சிவமேயாவர். இவர்தம் காட்சியும் கனிவிற் சிறந்த சொல்லும் உயிர்க்கு உறுதுணையாக நின்று உறுதி பயப்பனவாகும். இவர்கள் சொல்லுவதே அறம். அறம் புலமையில் தோன்றுவது அன்று. புலன்கள் பழுத்த சான்றோரிடத்தே தோன்றுவது. அறம் ஆரவாரத்தில் தோன்றுவது அன்று; அடக்கத்தில் தோன்றுவது. அறம் மாடமாளிகையில்