பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாளிகையாக எழுதல்போல, அறமும் சிலவாகவும், பலவாகவும் பெருகி வளர்ந்து முழுமையாகிறது. இதனை,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வா யெல்லாம் செயல்

என்று திருக்குறள் விளக்குகிறது. இத்திருக்குறளில் "ஒவாதே" என்ற சொல் உணரத்தக்க ஒரு சொல். உலகத்தின் இயக்கம் ஓயாது இயங்குகிறது. அதனாலன்றோ உயிர்கள் வாழ முடிகிறது! உலகம் என்ற பேரடுப்பில் இறைவனாகிய சமையற்காரன் ஒயாது ஒழியாது சமைத்துச் சுவை குன்றாத - சுவை பழுத்த காய்களை, கணிகளைத் தரும் அற்புதத்தை நினைமின்! ஆதலால் ஓயாது அறம் செய்க! எப்பொழுதும் செய்க! புலன்களால் செய்க! பொறிகளால் செய்க! இதுவே வாழ்க்கை முறை!

ஜான் வெல்ஸிலி என்ற அறிஞன்,


"உன்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய்.
உன்னால் முடிந்த எல்லா முறைகளிலும் செய். உன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் செய். உன்னால் முடிந்த எல்லா இடங்களிலும் செய். உன்னால் முடிந்த எல்லாக் காலங்களிலும் செய்.
உன்னால் எவ்வளவு காலம் செய்ய முடியுமோ
                                        அவ்வளவு காலம் செய்”

என்று கூறினான். இதனையேதான் சுருக்கமாக "ஒல்லும் வகையால்” என்றும், "செல்லும் வாய், எல்லாம்” என்றும், வள்ளுவம் கூறுகிறது. கடவுளை நினைந்து அவனது அருளாகிய மழையில் அகமும் புறமும் நனைந்து அவனருள் பெற்றோர் வழிநின்று, அவருணர்த்தும் அறம் பயிற்றுதல் - வாழ்க்கை நெறி என்று வள்ளுவம் காட்டும் நெறியில் நின்று அந்நெறியையே வாழ்வின் வழித்துணையாய்க் கொண்டு வாழ்வோம்.