பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

221




அருட் செல்வம்

வித்து முளையாகிறது; முளை செடியாகிறது; செடி மரமாகிறது; மரம் பூக்கிறது; பூ காயாகிறது; காய் கனியாகிறது. இது போன்றே மனித வாழ்க்கையும் வளர்ந்து கனியாகும் வரையில் பல்வேறு பொருட்களின் தொடர்பும், உறவும் தேவை. கனிந்த பிறகு எந்த ஒன்றன் தொடர்பும் கனிக்குத் தேவையில்லை. கனி நிலைக்கு முன்பு சுவையிலும் தர வேறுபாடுகள் உண்டு. கனி நிலையில் சுவை வேறுபாடில்லை. நிறை நலமிக்க சுவையுடையதாகிறது. இறைவனை, "பழத் திடைச் சுவையொப்பாய்” என்று அப்பரடிகள் பாராட்டுகிறார்.

"அது பழச்சுவையென” என்று மணிமொழி பேசுகிறது. அருள் பழுத்த பழச்சுவையென மறைகள் போற்றும். திருக்குறள், கருவுயிர்த்த நாள் முதல் தனி மனிதனைத் தொடர்ந்து வளர்த்து, அவனை அன்பு நெறி பயில, குடும்பத்தில் சேர்ப்பித்து, அன்புநெறியில் பயிற்றுவித்துப் பின் மேலதாகிய அருளியல் வாழ்க்கைக்கு உயர்த்துகிறது. உலகில் மனிதர்களுக்குச் செல்வங்கள் பலப்பல வேண்டும். ஆயினும் அருட்செல்வமே தலையாய செல்வம்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள

என்று குறள் கூறுகிறது.

"செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்" என்றும் குறள் கூறுகிறதே என்ற வினா எழலாம். ஞானாசிரியன் செவி வழியாக உபதேசித்தருளிய திருமந்திரச் செல்வத்தால் அருட்செல்வம் விளைவதால், உபசார வழக்கமாகச் செவிச் செல்வத்தைச் சிறப்பித்தார். அன்பின் முதிர்ச்சியில் அருள்