பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

231


அவர் பாசத்தையே” என்று அருட்டிரு குமாரசாமி முனிவர் பாடிய பாடல் உணரத்தக்கது. ஆதலால், துன்பத்திற்கு அஞ்சித் தவம் செய்ய முடியாது. துன்பம் பொறிகளின் வழி வந்தாலும் சரி, புலன்களின் வழி வந்தாலும் சரி, அல்லது வேறு எவ்வழி வந்தாலும் சரி, அந்தத்துன்பத்தினைத் தாங்கிக் கொண்டு தடுமாறாமல் நோற்பதே தவம். அங்ஙணம் தவம் செய்வார்மாட்டு, திருவருள் மேலோங்கி வெளிப்பட்டு நிற்கும். இதனையே அப்பரடிகள் "உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால், முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" என்றார்.

உடலையும் உள்ளத்தையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்றிக்கொள்ள முயல்வதே தவம். இத்தகு தவத்தைப் புரிந்திலனேயென்று எண்ணி ஏங்குகின்றார் மாணிக்க வாசகர்.

தவமே புரிந்திலன் தண்மல
ரிட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே யருளுகண் டாயடி
யேற்கெம் பரம்பரனே

என்பது திருவாசகம்.

களத்துமேட்டில் நெல்லைத் தூற்றுபவர்கள் நெல்லின் மீதுள்ள கருணை காரணமாக நெல்லைத் தூற்றுவதில்லை. தம்முடைய பயன் கருதியே தூற்றுகிறார்கள். அதுபோலத் தவம் செய்தால், செய்பவருக்குப் பெருமையே தவிர, தவத்திற்குப் பெருமையன்று. தவத்தினால் கடவுளுக்குப் பயனில்லை. மனிதனுக்கே பயன். "பொன்னால் பொன்னைப் பெற்றவருக்கே பயனுண்டு.