பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்பி அலைந்தாலும் அவை பெறுவது என்னவோ துன்பமாகவே இருக்கிறது. இஃது ஏன்? கடவுளின் இலட்சியமும் உயிர்களுக்கு இன்பத்தைத் தருவது இயற்கையின் இலட்சியமும் உலக உயிர்களுக்கு இன்பத்தைத் தருவது; மனிதப் பிறப்புகளில் கூட நெஞ்சத்தால், முகத்தால், மொழியால் உயிர்களுக்கு இன்பம் தருதலே இலட்சியமாகும். இங்ங்னம், எல்லாம் இன்பச் சூழலுக்கென அமைந்திருந்தும் துன்பம் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? இதனைத் திருக்குறள் ஆராய்ந்து வழி காட்டுகிறது. அறியாமையின் காரணமாக நன்றைத் தீதென்றும், தீயதை நன்றென்றும், இன்பத்தைத் துன்பமென்றும், துன்பத்தை இன்பமென்றும் மயங்கி மாறுபட உணர்வதாலேயே துன்பம் விளைகிறது.

ஆமையை அவித்துண்ணும் ஒரு வீடு. அடுப்பில் உலைப்பானை ஏற்றி, விறகு வைத்துத் தீமூட்டி ஆமையை உலைப்பானையில் இடுகின்றனர். அடுப்பு எரிகிறது; தண்ணிரில் கிடந்து மரத்துப்போன ஆமைக்கு இளம் குழு இன்பமாக இருக்கிறது. ஆமை உலைப்பானையில் மகிழ்ச்சிப் பெருக்கில் மகிழ்ந்து ஆடுகிறது. ஐயகோ! சில மணித்துளிகளில் தண்ணீர் கொதி நிலையாக மாறித் தாங்கொணா வெப்பத்தால் வெந்து அழியப்போகிறோம் என்று எண்ணிப் பார்க்க ஆமையால் முடியவில்லை. அதுபோல உயிர்களும் முறை பிறழ்ந்த மனப்போக்குகளாலேயே துன்பம் அடைகின்றன. இதனை,

பொருளல்ல வற்றைப் பொருள்என் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

என்றும் குறள் தெரிவிக்கின்றது.

பொருளும், பொருளினால் விளையும் பயனும் ஒரோவழி மாறுபடாமல் இருப்பதுண்டு. பல சமயங்களில் அவை தம்முள் மாறுபடும். அப்பொழுதெல்லாம் பொருள் -