பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

249


களைப் பயன் நோக்கியே கருத வேண்டும். பொருள் கருதி எடுத்துக் கொள்ளக்கூடாது. வேம்பு கசப்பானது. கரும்பு இனிப்பானது. கரும்பு உண்பது அதிகப்பட்டால் தீமை விளையலாம். வேம்போ குறையினும், மிகினும் தீமை தராது. உறவும் நட்பும் இனிமையானது. ஆனால் எந்த நட்பு இனிமையானது? குற்றங்கடிதலும், குணம் உவத்தலும் கலந்த நட்பே இனிய நட்பு. இத்தகு நட்புறவில் தீமை இல்லை. போலி இன்ப நைப்பாசைகள் கலந்த உறவு இன்பம் போல் தோற்றித் துன்பம் தரும். எது, என்றும்- எப்பொழுதும் துன்பங்கலவாத அழிவின்பத்தைத் தருமோ அதுவே பொருள். மற்றவையெல்லாம் பொருளல்ல என்பது கருத்து. இதனை வலியுறுத்தவே.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று குறள் கூறுகிறது.

துறவு மனப்பான்மை பல காரணங்களால் தோன்றலாம். ஆனால் சிறந்த அனுபவ அறிவின் முதிர்ச்சியில் தோன்றுவதே சாலச்சிறந்த துறவு. துறவு என்றால் சந்நியாசம் என்றே பொருள்கொள்ளுதல் முறையன்று. அது துன்பத் தொடக்கினையுடைய பொருள்களின் நிலைமை அறிந்து உணர்ந்து, அவற்றினின்று விலகுதலேயாம். மனையற வாழ்க்கை மேற்கொண்டோரில் மிகச் சிறந்த துறவு மனப்பான்மையுடையோர்களும் உண்டு. திருநீலகண்டர், இளையாங்குடி மாறனார் ஆகிய அடியார்களின் வரலாறும், அண்ணல் காந்தியடிகளின் வரலாறும் எண்ணத்தக்கன; உணரத்தக்கன. உலகம் நிலையற்றது என்பது வரலாற்றுத் தத்துவ அறிஞர்களின் முடிபு. உலகம் நிலையற்றது என்றால் உலகம் அழியக்கூடியது என்பது பொருளன்று. உலகம் அழிவதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எப்பொழுதோ ஒரு தடவை உலகத்தின் வடிவம் மாறலாம்;