பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

253



இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

என்று கூறி விளக்குகிறது.

ஆசை கடல் போன்றது. கடலுக்குக்கூடக் கரையுண்டு. ஆசைக்கு ஏது எல்லை? ஆசை தகுதி பார்க்குமா? நீதி நியாயம் பார்க்குமா? இல்லை வெட்கந்தான் படுமா? அதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு பச்சை நிர்வாண தேவதை! அதைப் பூசிப்பவர்கள் அழிவார்கள்.

அதனாலன்றோ திருமூலரும்,

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

என்று கூறினார். திருவள்ளுவரும், அவா நீங்கியவுடனேயே மாறாத பேரின்பம் கிடைக்கும் என்பதனை,

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர், பிறவி நோயைக் கொடிய பகையாகக் கருதுகிறார். இந்நோய்க்குக் காரணமாயுள்ள காமம், வெகுளி, மயக்கங்களைச் சாடுகிறார். இவற்றின் பெயரும் கூடக் கெடவேண்டும் என்று கூறுகிறார்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

என்பதிலுள்ள உறுதி உணரத்தக்கது.

மழை நீருக்கு வண்ணமில்லை; மணமில்லை; ஆயினும் சார்பினால் அவற்றைப் பெறும். காற்றிற்கு மணமில்லை; சார்பினால் அதனைப் பெறும் உயிரும் இத்தகையதே. உயிர் யாதானும் ஒன்றைச் சார்ந்து நிற்கும் இயல்புடையது. உயிர்