பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யன்றி, வசிப்பவர் வசதியைப் பற்றிக் கவலையில்லை. அதனாலன்றோ, வாடகை வீடுகளில் குடியிருந்து அலுத்தவர்கள் எப்படியாவது சொந்த வீடு கட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்; கட்டி மகிழ்கிறார்கள்!

சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போகும் வீட்டுக்கே இந்த நிலையென்றால் அழியாத இன்பத்தைத் தரும் பேரின்ப வீட்டை என்னென்று புகழ்வது; வாழ்த்துவது!

உயிர் உடம்பில் தங்கியிருக்கிறது. உயிருக்கு இந்தக் குடியிருப்பு நிலைத்ததன்று. இந்த உயிர் முன்னே பல குடியிருப்புகளில் குடியிருந்து, குடியிருந்து களைத்து வீடுகளை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. உயிர் முன்னே குடியிருந்து காலி செய்த வீடுகள் பலப்பல என்ற கருத்தினை- 'எழு பிறப்பு' என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவம் விளக்குகிறது. இதனையே,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

என்று மணிவாசகமும் பேசுகிறது. ஐயகோ! நினைத்தாலும் துன்பம் தரும் குடியிருப்புகள்! குடியிருப்புகளாவது தனியே வாழ்ந்த குடியிருப்புகளா? இல்லை! ஒட்டுக் குடித்தனங்கள்! உடன் குடியிருந்தவை ஐம்பூதங்கள்! அவை தம்முள் ஒன்றுக்கொன்று முரண்பாடு தோன்றும் பொழுது ஏற்படும் நிலைமையைச் சொல்ல வேண்டா. நோய்க்குக் காரணம் யாதோ? மருந்து இடுவது யாரோ? என்ற நிலை. இத்தகு துன்பம் தரும் குடியிருப்புகளை விட்டு விலகி, விடுதலை பெற்று நிரந்தரமாகக் குடியிருக்கக்கூடிய வீடு-இறைவன்