பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

269


வருகின்றனர். இது தவறு என்பதை வள்ளுவம் சிறப்பாக உணர்த்துகிறது. பெற முடியாதவற்றைப் பெற முடியுமாயினும் உயர்குடிப் பிறந்தோர், புகழ் குன்றுதலுக்குரிய காரியங்களைச் செய்யார். புகழ் குன்றிய பிறகு, அடுக்கிய கோடி செல்வத்தினாலாய பயனில்லை.

அதனால் திருவள்ளுவர்,

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்

என்றார்.

உயர்குடிப் பிறந்தார்க்குச் செல்வமின்மை வறுமையன்று. மற்றவர்களுக்கு வழங்க முடியாத நிலைமையே அவர்களுக்கு நல்குரவு, வழங்க முடியாத வறுமை வந்துற்ற போதும், தம்முடைய வழங்குகின்ற பண்பினின்றும் உயர்குடிப் பிறந்தார் மாறுபடார்; தமிழ்ப் புலவருக்குத் தலை கொடுத்தான் குமணன், செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இதனை,

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

என்று குறள் பேசுகிறது.

நல்ல குலத்தில் பிறந்து வாழ்வோர் வறுமை முதலிய கேடுகளின் காரணமாக வஞ்சனை முதலிய கேடுகளைச் செய்யாமாட்டார்கள்; அவர்களுக்குச் செய்யவும் தெரியாது. இதனை,

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்