பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்கிறது குறள். ஒரு தனி மனிதனிடத்தில், தகுதியற்ற ஒழுக்கக் கேடுகளைப் பார்க்கிறோம். குறிப்பாக ஈகை, இரக்கவுணர்ச்சியற்றவனாக விளங்குகிறான். அவனை நாம் பார்த்தவுடன் நமக்கு அவன்மீதே சினம் ஏற்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் அவனை ஆராயவில்லை. அவனுடைய தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்த குலத்தினையே ஆராய்கின்றார்; நம்மையும் ஆராயச் சொல்லுகின்றார்.

பழங்காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான். ஆங்கு அவனுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தது. சுற்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. அவனுடைய அமைச்சர் முதலாயினோர் தண்ணீர் கிடைக்காமல் போனதால் சாலை ஓரத்தில் வெள்ளரிக்காய் போலக் காய்த்துக் கிடந்த ஒன்றைப் பறித்து அரசனுக்குக் கொடுக்க எண்ணினர். அமைச்சர் முதலாயினோர் இங்ங்ணம் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையற்ற ஒருவன், அது வெள்ளரிக்காய் அல்ல என்று சொல்லித் தடுத்தான்.

"பிறவிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு இது வெள்ளரிக்காய் அல்லவென்று எப்படித் தெரியும்?” என்றனர் அமைச்சர் முதலாயினோர். அதற்கு அவன் "எனக்குக் கண்கள்தாம் குருடு; நான் கருத்திற் குருடன் அல்லன்” என்று கூறி, "இந்தக் காய் காய்த்துக் கிடக்குமிடம், பலரும் நடமாடும் பொதுவழி; இந்தக் காய் தின்னக்கூடியதாக இருக்குமானால், பலரும், பறித்துத் தின்றிருப்பார்கள். இது பயனற்றது என்பதனாலேயே வாளா கிடக்கிறது" என்று கூறினான்.

அரசன் பார்வையற்றவனான அவனுடைய நுண்ணறிவைப் பாராட்டி அவனுக்கு நாள்தோறும் ஒருவேளை சோறு போட உத்தரவிட்டான். ஆனால் அவனோ, அந்த ஒருவேளைச் சோற்றில் மனநிறைவு கொள்ளவில்லை.