பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வெளிப்படுமாயின் நிலம் செழுமையானது. அதுபோல உயர்குடிப் பிறந்தார் இயல்பு அவர் வழங்கும் சொற்களாலேயே அறியப்பெறும்.

காற்று, அது படர்ந்து வரும் வழியில், நிலத்தில் கிடந்த பொருள்களின் தன்மையை மணத்தால் காட்டும். காற்று படர்ந்து வந்த வழியில் கிடந்த பொருள்களின் இயல்பிற்கேற்றவாறு அமையும். அதுபோல் குடியிற் சிறந்தாருடைய மனத்தில் குடிப்பிறப்புற்குரிய உயர் பண்புகள் அமைந்து கிடப்பதை அவர்தம் வாய்ச்சொல் காட்டும். உயர்குடிப் பிறந்தாரின் வாய்ச்சொற்கள் கனிவுடையனவாக-பயன் தரத்தக்கனவாக இருக்கும். இதனை,

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

என்று குறள் ஓதுகிறது.

நலம் வேண்டும். அந்நலனையடைய வழி, நாணமுடையனாதலேயாம். நாணமுடைமை எல்லா நலனும் தரும், நாணம் என்பது உடலால் கூனிக் குறுகும் வெட்கமன்று. பழி பாவங்களுக்கு அஞ்சுதலே நாணமாகும். அது போல உயர்குடிச் சார்பும், பெருமையும் வேண்டுமெனில் பணிவு வேண்டும். எங்கே பணிதல்? தம்மினும் செல்வத்தில் அதிகாரத்தில் உயர்ந்தோர்க்கு எல்லாரும் பணிவர். அது பணிவா? இல்லை, நடிப்பு! திருவள்ளுவர் யார்க்குப் பணிய வேண்டும் என்கிறார். யாவரிடத்தும் பணிதலே சிறப்பு என்கிறார். இதனை,

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்
குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு