பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

273


என்றார். இதனையே "புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களின் பணிமொழி பயிற்றி” என்று அகம் பேசுகிறது.

உயர்குடிப் பிறந்தார் எதை இழந்தாலும் இழப்பர். தன்னுடைய குடியின் சிறப்புக்குன்ற-சிறப்புச் சிதைய விரும்ப மாட்டார்கள். உயர்குடிப் பிறந்தார் புகழ்பெறும் பொழுதும் கூட, முறையாகப் பேராண்மைச் செயல்களின் மூலமே புகழினைப் பெறுவர். சின்னஞ்சிறு செயல்களைச் சந்து பொந்துகளில் செய்து, புகழினைப் பெற, உயர்குடிப் பிறந்தார் கருதமாட்டார்கள். உயர்குடிப் பிறந்தார் பெருக்கத்தில் பணிவோடு இருப்பர். அவர்கள் அடக்கம் ஆழ்கடலினும் பெரிது. அவர்களே, இயற்கைக்கேடுகளினாலாவது, வேறு பிற காரணங்களினாலாவது வளங் குன்றுவார்களாயின் தம்முடைய பெருமையை-தம்முடைய குடிப்பிறப்பின் பெருமையை உயர்த்தியே பிடிப்பார்கள். ஒருபொழுதும் தாழ விடமாட்டார்கள், இதனை,

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

என்று குறள் கூறுகிறது. சுருக்கத்து வேண்டும் உயர்வு என்றால், பணிதலுக்கு மாறான உயர்வு அல்ல; அகங்காரமும் அல்ல; ஏழையராகி இகழ்ச்சி சொல எளிதிற் போதலைத் தவிர்ப்பதே உயர்வு என்று கருதப்படுகிறது.

நம்முடைய தலையில், நமக்கு அழகும், பாதுகாப்பும் கொடுப்பதற்காக அழகிய ரோமங்கள் வளருகின்றன. இவை அடிக்கடி வீழ்தலும் உண்டு. அங்ஙணம் வீழ்ந்த ரோமங்களைக் கொண்டு, ஒன்றாக்கிப் பூண் முதலிய கட்டி, 'சவுரி' என்று பெயரிட்டு விலை வைத்து விற்பார்கள். அந்தச் 'சவுரி'க்குப் பூண்களும், பாதுகாப்பும், பெட்டிகளும் இருந்தாலும் அவை ஒரு முழமாக இருப்பவை ஒன்றரை முழமாக வளர்ந்து