பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடுவதில்லை. ரோமங்கள் தலையில் இருக்கிறவரையில் அவற்றுக்கு வளர்ச்சி உண்டு; அவை கீழே வீழ்ந்து விட்டால் வளர்ச்சி இல்லை.

ஒரோ வழி, சேர்ந்த இடத்தின் காரணமாக சவுரிக்கு மதிப்புக் கிடைக்கலாம். ஆனாலும், இயற்கைக்குள்ள மதிப்பு இல்லை. இந்த அழகான சாதாரணச் செய்தியை எவ்வளவு சிறப்பாக மானம் என்ற பேரொழுக்கத்தோடு சேர்க்கிறார் திருவள்ளுவர்! மாந்தரும் தம்முடைய மனித நிலையில், உயர்குடிப் பிறப்பு நிலையில் நின்று ஒழுகினால், மேலும் வளர்வர்; புகழினைப் பெறுவர். அங்ஙனமின்றி, தமது நிலையினின்றும் இழிந்து செயல்கள் செய்யின் தம்மையும் இழந்து, தமது குடிப்பிறப்பின் சிறப்பினையும் இழக்கின்றனர் என்பதை,

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

என்ற குறள் கூறுகிறது. குன்றனைய வாழ்க்கையையும் கூட, ஒரு குன்றிமணி அளவு குற்றம் கெடுத்துவிடும். மிகப்பெரிய மலையைச் சிற்றுளி உடைத்து நொறுக்கவில்லையா? உருத்தும் பருத்தும் உள்ள மரத்தினைக் கறையான் அரித்துத் தின்னவில்லையா? என்பதனை உணர்க. பெருந்தன்மையும் குடிப்பிறப்பும் கெட்டவிடத்து வாழ்தல், "ஊன் ஓம்பும் வாழ்க்கை” என்று திருவள்ளுவர் நையாண்டி செய்கிறார்.

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து

என்னும் குறளை நினைக. சாதாரண-ஒன்றுமறியாத கவரிமான் கூட மயிர் நீப்பின் வாழ்வுதில்லை. அது போல உயர்குடிப் பிறந்தோர் மானம் போயின் உயிர் வாழார்.