பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

277


துன்பங்களை ஏற்பர்; மரணத்தையும் வலிந்து ஏற்றுக் கொள்வர். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள்-கடமைகள் அருமையானவை; ஒளியுடையவை. இதனை,

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்

என்று கூறுகிறது குறள்.

இவ்வுலகில் நிறையக் கற்கள் உண்டு. எல்லாக் கற்களும் வைரக் கற்களாகுமா? வையத்தில் சோற்றுக்கும் துணிக்கும் அல்லாடும் கோடானுகோடி உயிர்கள் உண்டு; மனிதர்கள் உண்டு. எல்லாரும் உயிராகப் பிறந்தவர்கள்தாம். பிறப்பினால் ஒத்த நிலையினரேயாம். அதனாலேயே சிறப்புத்தன்மை பொருந்தியவர்கள் ஆக மாட்டார்கள்.

சிறப்புத் தன்மை என்பது, உருவாக்கிக் கொள்ளப் பெறுவது. இந்தச் சாதனையைச் செய்து கொள்ளும் பொறுப்பு அவரவர்களிடமே யிருக்கிறது. ஊனுடல் வயிற்றில் பசியிருப்பதைப்போல, உயிரியல் வாழ்க்கையில் புகழ்ப் பசியை அமைத்தான் இறைவன். ஆனால் பலருக்கு ஊனுடல் பசியே தெரிகிறது. வேளை தவறாது உண்கின்றனர். உயிர்ப் பசியாம் புகழ்ப் பசியைப் பலர் அறிவதில்லை; உணர்வ தில்லை. இப்பசியைத் தணிப்பதற்குரிய வேலையை-கடமை வேள்வியை-வேளை தவறாமல் செய்வதில்லை.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்பது குறள்.

சிலர் சாதியால் உயர்ந்த வீட்டில் பிறந்து வாழ்வர்; சிலர் அடுக்கிய செல்வத்தால் உயர்ந்த மச்சு வீடுகளில் பிறந்து வாழ்வர். சிலர் தோற்றத்தால் உயர்ந்த கோலங்கள் கொண்டு வாழ்வர். இவையெல்லாம் உண்மையிலேயே மேன்மையை பெருமையைத் தரா. சிலர் எளிய குடிசையில் தோன்றி வாழ்-