பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வர்; சேரியில் பிறந்து வாழ்வர் தோற்றங்களும் இல்லாம லிருக்கலாம். ஆயினும், கொண்டொழுகும் நிலையால், அரிய சாதனையால், மேலானவர்களாக மதிக்கப்படுவர்.

அரிமர்த்தன பாண்டியன் அரசு நிலையால் மேலானவனே. ஆயினும், மாணிக்கவாசகரின் மேலாண்மையின் முன்னே ஈடுகொடுத்து நிற்க முடியவில்லை. பல்லவப் பேரரசன் அரசு நிலையால் மேலானவனே. ஆனால், அப்பரடிகளின் சீலத்தின் முன் அவனால் நிற்க முடியவில்லை. இதனை,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்

என்ற குறளால் அறிக.

பெருமையுடையாருக்கும், அஃதில்லாதாருக்கும் வெளிப்படையான அடையாளம் ஒன்று உண்டு. இயற்கையில் பெருமையுடையார் முற்றிய நெற்கதிர் தலைசாய்ந்து கிடப்பதைப் போல அடங்கிக் கிடப்பர். மரத்தின் உயிர் வாழ்க்கைக்கும்-பசுமைக்கும்-பயன்படும் தகுதிக்கும் உறுப்பாயமைந்துள்ள வேர், மண்ணில் மறைந்து கிடக்கும். அடுக்கிய சிறப்பினையுடைய மாளிகையினைத் தாங்கும் அடிக்கல் மண்ணில் மறைந்து கிடக்கும். இவை எவற்றையும் ஏற்றுக் கொள்ளும்.

அதுபோல, பெருமைக்குரியவர் எதையும் இகழார்; எவரையும் இகழார். ஆனால், சிறுமைக் குணமுடையவரோ தருக்கித் திரிவர். கழனிகளில் பசையற்ற பதர் திமிர்ந்து ஆடுவதைப்போல ஆடுவர்; தம்மினும் உயர்ந்தோரை-பெருமைக்கு உரியோரை அணுகி, அவர்தம் நெறியில் நின்று ஒழுகமாட்டார். இகழ்ச்சியும், அலட்சியமும், தருக்குதலும் தலைதடுமாறுதலும் சிறியோரின் இலக்கணம். இதனை,