பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

285


கேலியுமாகப் பேசுவர். இது மிகவும் தவறான தீயொழுக்கம், அதனால் "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி" என்று கூறுகிறது, குறள்.

சிலர், பகைமை காரணமாக இகழ்வர். அஃதும் நல்லதல்ல. இகழ்தலால் இகழப்படுவாருக்கு எவ்வளவு இழப்புண்டோ, அதே அளவு இல்லை, அதைவிட அதிகமாகக்கூட இகழ்வாருக்கும் இழப்புண்டு. இகழப்படுவோர் இகழ்வாரினின்றும் விலகிச் சென்றால் புகழ்ச்சியைப் பெறலாம். ஆனால் இகழ்வாருக்கு இகழ்தல் பழக்கமும் வழக்கமும் ஆகிவிடின், பெருமையுடையோரை உறவாகக் கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஆதலால், பகையுள்ளும் பண்பு பாராட்டுதலே சிறப்பு.

பாராட்டுதலின் மூலம் பாராட்டப்படுபவர்கள் குற்றங்களின் நீங்கிச் சிறப்புறுவர். இஃது இயற்கை. பாராட்டும் பண்பின் மூலம் பாராட்டப்படுவோருக்கு மட்டுமே பயன் இல்லை. பாராட்டுவோருக்கும் உண்டு. பாராட்டுகின்ற குணம்-தெள்ளிய-வற்றாத நீர் ஊற்று உடைய சுனை போன்றது. பாராட்டும் குணம் மேலும் உயர்த்தும். அதனாலன்றோ, இறைவனும் "நந்தம்மை கோதாட்டி" ஆட்கொள்ளுகின்றான். இதனால் நமக்கு மட்டுமா பெருமை? இறைவனுக்கும் பொருள்சேர் புகழ் கிடைக்கிறது.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு

என்பது குறள்.

சிலருக்குக் கூர்மையான புத்தியிருக்கும்; அறிவிருக்கும்; ஆற்றலும் இருக்கும். ஆயினும் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்க இயல்புகளும், ஒத்ததறிந்து வாழும் இயல்பும் பெற்றுப் பண்புடையராக வாழாது போனால், மரம் போன்றவர்கள் என்று குறள் கண்டிக்கிறது. மக்கள் மீதுள்ள இரக்கவுணர்ச்சி-