பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

287


இந்த உலகியல் மகிழ்ச்சியின் பாற்பட்டது. மகிழ்ச்சிக்காகவே ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியை ஒளியூட்டி வளர்க்கப் பகல் வருகிறது. ஆனால், பலர் பகலை இருள் நிறைந்த இரவாக்குகின்றனர். எப்படி? கதிரவன் ஒளிக்கதிர்க் கற்றையை வீசுகிறான். ஏன்? ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, உணர்வால் உள்ளத்தால் கலந்து சிரித்துப் பேசி மகிழ்வதற்காகவேயாம். அங்ஙனம் வாழ்வோர் எத்தனை பேர்? பகையின் காரணமாக ஒருவரை ஒருவர் பார்த்தாலும் பாராதது போல ஒதுங்கிப் போவோரும் சிலர்; அதுவுமின்றிக் கடுகடுத்த முகத்துடன் உறுமி முறைத்துப் பார்த்துப் போவோரும் எத்தனையோ பேர்.

“முல்லைக் கொடியில் அரும்புகள் பூத்திருக்கின்றன! என்ன மகிழ்ச்சி! அதுபோல மனிதனுக்கு முத்துப்போன்ற பற்கள்! பற்கள் முறுக்கைக் கடித்துத் தின்னப் பயன்படலாம். தவறில்லை. ஆனால் பலர் பகை நினைந்து "நற நற"வென்று. தம் பற்களைக் கடிப்பதைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. இத்தகையோருக்குக் கலந்து பழகும் பயனடையாமை காரணமாகப் பகலும் இருளாகிறது. இதனை,

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

என்கிறது குறள்.

ஒரு குடம் நிறையப் பால்; குடித்து வளரக்கூடிய பால்; உணவும் மருந்துமாகப் பயன்படக்கூடிய பால். எனினும் அந்தக் குடத்துப் பாலில் மனிதனின் செயற்கையாகிய நஞ்சு ஒரு சொட்டுக் கலந்தால் என்னவாகும்? மகிழ்வுக்குப் பதில் மரணம்; இன்பத்துக்குப் பதில் துன்பம். செல்வம் மகிழ்ச்சியின் சாதனம்; இன்பத்தின் ஊற்று. அதுவும் பெருஞ் செல்வமாயின் எண்ணில் இன்பங்கள் கிடைக்கும். செல்வத்தின் இயல்பு எதுவாயினும், அச்செல்வம் பண்பாடற்றோரிடம்