பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

293


இந்நிலவுலகத்தில் நிறையச் செல்வமிருக்கிறது. ஆயினும், பலர் வறுமையால் வாடுகின்றனர். ஏன்? செல்வ வறுமையினால் அல்ல, சிலரிடம் உள்ள நற்குண வறுமையினாலேயாம். செல்வம் அடுக்கிய கோடி பெற்றுள்ளவராயினும் செல்வத்தைப் பயனறிந்து பயன்படுத்துவதில்லை. உலகில் செல்வத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் தகுதியறிந்து பயன்படுத்துவோரே வைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்தவரே நாதஸ்வரம் வைத்திருக்கிறார். நாதஸ்வரம் வாசிக்கத் தெரியாதவர்கள் அதை வைத்திருக்கமாட்டார்கள். அப்படியே பெற்றிருந்தாலும் வாசிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்து கேட்டு மகிழ்வர். ஆனால், செல்வத்தின் பயனைத் தெரியாமலே, செல்வத்தைப் பலர் வைத்திருக்கிறார்கள். செல்வத்தின் பயன், ஈதல், மகிழ்வித்து மகிழ்தல், துய்த்தல் ஆகியவையாம். இந்த வகைகளில் பயன்படாத செல்வம், அடுக்கிய கோடி இருப்பினும் அஃது இல்லாததாகவே கருதப்பெறும். இதனை,


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்

என்று குறள் கூறுகிறது.

செல்வத்தை ஈட்டுதல், பேணிக்காத்தல் ஆகியவை துன்பந்தரும் பணிகளேயாம். ஆயினும் இத்துன்பம் அனைத்தையும் இன்பமாக மாற்றக்கூடியது, தாம் துய்த்து இன்புறுதலும் பிறருக்குக் கொடுத்து மகிழ்வுறுத்தும் வழி இன்புறுதலும் ஆகும். ஈதலும், துய்த்தலும் இயற்றாதவர்கள் செல்வத்தில் பயனை இழக்கின்றனர். அதோடு இன்புறுதற்குக் காரணமாய செல்வம் நோயாகிச் செல்வமுடையவனை அழிக்கும். செல்வத்தினைத் தகுதியறிந்து பயன்படுத்தாதவன் களவு, காவல்களால் அலைக்கழிக்கப்படுகின்றான்.