பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து

என்று குறள் கூறுகிறது.

மாரிமழை பெய்யத் தவறின், உலகம் வளம் குன்றி வறுமையால் இடர்ப்படும். அதுபோலவே சீருடைச் செல்வர் கொடுப்பதொழித்தால் உலகம் வறுமையால் இடர்ப்படும். மாரி கொடுப்பதை மறந்தால் மீண்டும் மாரியாதலையும் தம்முடைய மாரி என்ற பெயரையும், புயல் சுமந்து வரும் இயல்பையும் இழக்க நேரிடும். அது போலவே சீருடைச் செல்வர் செல்வத்தைக் கொடுக்காவிடில், அந்த செல்வத்தை இழக்க நேரிடும் என்ற கருத்தும் இதன் பாலுளது. செல்வமென்பது நன்று; நன்று தருவது. நன்று என்பது மகிழ்வித்தலும் மகிழ்தலுமாகும். அந்த இயல்பறிந்து வாழ்தலே திருக்குறள் உலக வாழ்க்கை.

நாணுடைமை

திருக்குறள் ஒழுக்கத்தால் உயர்ந்த உலகத்தைக் காட்டுகிறது. திருக்குறள் மனிதனுக்குப் பல்வேறு உடைமைகளைத் தருகிறது. அந்த உடைமைகள் மனிதனுக்கு அனைத்தும் ஒன்றினை ஒன்று சார்ந்து, அணிக்கு அணியாக-அழகுக்கு அழகு செய்கிறது. அத்தகு அணிகளுள் நாணுடைமையும் ஒன்று. ஏன்? மனிதன் கொள்ளத்தக்க உடைமைகளில் இதுவே தலையாயது என்று கூறினாலும் தகும். மனிதன் வெட்கப்படுகிறான். எதற்கு? ஏழை என்பதைக் காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். இது அவசியமா? அவசியமல்ல. ஒருவன் ஏழையாக இருப்பது அவனுக்கு வெட்கமல்ல. அவனைச் சார்ந்த சமுதாயத்திற்கே வெட்கம், ஆனால், உண்மையில் எதற்கு வெட்கப்படவேண்டும்? அறம் அல்லாதனவற்றை நினைக்கும் பொழுது, செய்ய முற்படும்