பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவற்றை இல்லையென்பார் உண்டோ? அல்லது இவற்றின் ஆற்றலை இயல்பைக் குறைத்து மதிப்பிடுவாருண்டோ?

இந்த உருவமற்ற பொருள்கள், உருவங்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது மணம் தருகிறது; காதல் விளைவிக்கிறது; ஒளி தருகிறது; இயக்குகிறது; மகிழ்வைத் தருகிறது; உடலுயிர் உறவை இணைக்கிறது. அதுபோலவே, உயிர் வடிவமற்றதாயினும் வடிவமாகிய பருவுடலுடன் தொடர்பு கொள்ளும்போது இயங்குகிறது.

உயிர் தங்கியிருந்து பயிலும் பருவுடலுக்கு உணவு தேவை. ஆதலால், உயிர்கள் உணவை நாடும். அதுபோல, நற்குணங்களைப் பெற்று ஆட்சி செய்யும் சால்பு நாணுடைமையை நாடும். நாணம் உடைமையின் வழியேதான் சால்பு விளங்க முடிகிறது. நாணத் தகுவனவற்றை நாணாது, ஒருகால் பழகிவிட்டாலும், நாணாமை உயிர்க்குப் பழக்கமாகி விடுகிறது. நம்முடைய உள்ளத்திற்கு இயல்பிலேயே. நாணும் தன்மையுண்டு. பலர், அதை மரத்துப் போகச் செய்து விடுகின்றனர். ஊணினால் உடல் வாழ்க்கை, உடலால் உயிர் வாழ்க்கை, சால்பினால் உயர் வாழ்க்கை நாணுடைமையினால் சால்பு என்ற வாழ்க்கைமுறை எண்ணத்தக்கது. இதனை,

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு

என்று குறள் கூறுகிறது.

உலகில் ஏராளமான அணிகள் உண்டு. அணிகள் இருவகையின. ஒன்று புற அணியாம். பிறிதொன்று அக அணியாம். புற அணிகலன்கள் புல்லியரிடத்தும் உண்டு. ஏன்? விலங்குகளுக்கும் அணியலாம். புற அணிகலன்கள் புகழுடையன அல்ல. அவை இம்மையும் மறுமையும் தரா. அக அணிகலன்களே உயர்ந்தவை. அவற்றை முயன்று