பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமணங்கள் முடித்து வைத்தல் ஆகிய குடிசெயற் பணிகளைச் செய்தனர். இன்று சமூகப் பணி என்று கருதுவதற்கும் குடிசெயல் வகைக்கும் பெரிய வேறுபாடில்லை. சமுதாயப் பணிகளைச் செய்வதற்குச் சிறந்த சீலம் தேவை. சமூக மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதற்குச் சிறந்த சமூக ஒழுக்கக் கூறுகள் ஒருவனுக்குத் தேவை.

ஒழுக்க நெறிகள் இரு திறத்தன. ஒன்று தனது மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் தனது ஒழுக்கங்கள். பிறிதொன்று பிறர் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய சமூகத்துறைப் பழக்க வழக்கங்கள். பெரும்பாலோர் உடற்சார்புடைய தனது ஒழுக்கத்தில் வெற்றி பெற்று நின்று ஒழுகுவர். ஆயினும் சமூகத்துறைப் பழக்க வழக்கங்களில்-ஒழுக்கத்தில் அவர்களுக்கு நாட்டமிருக்காது. அதை அவர்கள் ஓர் ஒழுக்கமாகவே கருதுவதில்லை.

நம்முடைய நாட்டில் குடி வெறியும், காமவெறியும் மிகக் குறைவு. அடுதலும் கொல்லுதலும் கூடக் குறைவேயாம். ஆயினும் சமூக ஒழுக்கக் கேடுகளாகிய பிரிவினை, பேத உணர்ச்சி, 'எனது', 'உனது' என்ற வேறுபாடுகள், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் மலிந்து கிடக்கின்றன. இதனால் நமது நாடு தனி மனித ஒழுக்கத்தில் ஓரளவு மனநிறைவு தரத்தக்கதாக இருக்கிறது என்பதையும், ஆனால் அதே காலத்தில் மனித குல ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குரிய பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமநிலைச் சமுதாய அமைப்பிற்குரிய சமூக ஒழுக்கத்துறையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

பலரோடு கூடி நோதலும் தணிதலுமின்றி வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலும் ஓர் ஒழுக்கமேயாகும். இந்த, சமூக ஒழுக்கத்தில் ஒரு மனிதன் தன்னை ஈடுபடுத்தி வளர்த்துக் கொள்ளவேண்டும். தன்னலம் ஒரு நஞ்சு. இந்த