பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

311


செய்யவேண்டியது. குடி செயல் பணிகளுக்குப் பருவம் கிடையாது; நாள் பார்க்கக்கூடாது. 'இன்று', 'நாளை' என்று. நாள் பார்ப்பவர்கள் நாளைத் தள்ளுவார்களே தவிர, நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள்.

நம்முடைய சமூகத்தில் நாள் பார்க்கும் கெட்டபழக்கம் நிலைத்திருக்கிறது. "நாள் உதவி செய்வது போல், நல்லவன் உதவி செய்ய மாட்டான்” என்று சமாதானம் சொல்கிறார்கள். இந்தப் பழமொழி நாள் பார்ப்பவர்களுக்குச் சாதகமானதல்ல. இங்கு நாள் நாழிகையைப் பொறுத்தது தான்.

ஆம்! அறிவு, செல்வம், சீலம், புகழ் அனைத்தையும் நாம் நாள் என்ற களத்தில் நின்றுதானே ஈட்டுகிறோம்? இந்த நாளைச் சார்ந்ததுதானே எழுச்சியுடைய இளமை! இஃதில்லாதது முதுமை! இளமை துணை செய்வதுபோல் முதுமை செய்ய முடியுமா?

ஆதலால் நாள் பார்த்தல் என்பது நாளைக் கச்சிதமாகக் கணக்கிட்டுப் பயன்படுத்தல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்படியின்றி நாளை நல்ல நாள் 'கெட்ட நாள்' என்று பகுத்துப் பார்க்கக் கூடாது. நாள் நம்மைக் கெடுத்து விடுவதில்லை; நாளை நாம் கெடுத்து விடுகிறோம். அதனால் நாள் கெட்டது அல்ல; நாமே கெட்டவர்கள். அதனாலன்றோ திருஞானசம்பந்தர்.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

என்று அருளிச் செய்தார்! திருள்ளுவரும் குடிசெயலுக்குப் பருவம் பார்த்தல் தவறென்று கூறுகின்றார்.