பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உயிரினைச் சார்ந்த உள்ளம் 'குபுகுபு' என்ற சுறுசுறுப்புக்குரியது. கிளர்ச்சிகள் நிறைந்தது. சோம்பலும், அலுப்பும், சலிப்பும் மனிதனின் செயற்கையேயாம். சிலர் பொருள் செய்கிறார்கள். சிலர் புகழ் செய்கிறார்கள். சிலர் சோம்பலையும் முயன்று செய்கிறார்கள்! ஐயோ, பாவம்! இதனைத் திருவள்ளுவர் 'மடி செய்து' என்று நகைத்துப் பேசுகிறார். சோம்பலைச் செய்வான் சுற்றத்தைப் பேண மாட்டான். அதனால் குடி செய்தலும் ஆகா.

சிலர் எடுத்ததற்கெல்லாம் மானம் போகிறது என்பர். ஆனால் அவர்களையே மானம் எங்கிருக்கிறது என்று கேட்டால் சொல்லத் தெரியாது. அவர்களில் பெரும்பாலோருக்கு மானம், வேட்டியில் தானிருக்கிறது. ஒருசிலர் தவறுகளைக் கண்டபோது இடித்துக் கடிந்து சொல்வதில்கூட மானம் போய்விடுவதாகக் கருதுகிறார்கள். நாடாளும் அரசனுக்கே இடித்துச் சொல்லும் இணையற்ற நட்புக்குழாம் தேவையென்பது வள்ளுவர் கருத்து. ஆதலால் மானம் என்பது ஒருவர் தனிப்பட்ட முறையில் நம்மை விருப்பு வெறுப்புகளின் காரணமாக மதப்பதிலோ அவமதிப்பதிலோ இல்லை.

உண்மையில் மானம் நம்முடைய வினையின்கண் தங்கிக் கிடக்கிறது. நம்முடைய வினையின் மாட்சி, பயன் ஆகியன பற்றித் தொடர்பாகப் பிறர் மதிக்கும் மதிப்பீடுகளே நமக்கு மானமாகும்.

நம்முடைய நல்லாண்மையின் காரணமாக நாமும், நம்முடைய குடியினரும் ஆகிய அனைவரும் வளத்துடன் கூடி வாழ்வோமாயின் ஆங்கு மானமிருப்பதாகக் கருத்து. நம்மைச் சுற்றி வறுமை காணப்படுமாயின், நம்முடைய குடியினர் வறுமையால் வாட்டமுறுவாராயின் ஆங்கு நல்லாண்மையுமில்லை; மானமுமில்லை. சூழ்ந்திருப்போரின்