பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எது அன்பு? எந்த உயிரிடத்தும் காரணம் இல்லாமலேயே பள்ளந்தாழ் உறுபுனல் போலத் தோன்றி வளர்வது அன்பு. தூய அன்பிற்குக் காரணம் கிடையாது. காரியசாதனை அல்லது நோக்கமும் கிடையாது. காரியங்கள் நிகழும். தாம் வாழும் காரியமன்று. மற்றவர் வாழும் காரியங்கள் நிகழும். உயிர் இயற்கையின் அடிப்படையே, வாழ்வித்து வாழ்தல்தான்! அதுதான் அன்பின் இலக்கணம். இன்றும் இந்த இலக்கணத்திற்கு தாவர இனங்கள், விலங்கினங்கள் மாறுபடாது உயிர் வாழ்கின்றன.


ஆனால், பகுத்தறிவு படைத்த மனிதனோ அன்பிற்குப் போலி முலாம்பூசிப் பொய்மை பெருக்கிப் பகைமை வளர்த்துக் களவும் காவலும் படைத்துச் சிறைச் சாலையைக் கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ஏன் ? அன்பின்மையே காரணம். அதனால், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத எலும்பினைப் பெறாத புழுக்களைக் கதிரொளி காயும்; நீதி முறைப்படி பார்த்தால் கதிரவன் குற்றம் சாட்டப்படுவான். புழுவிற்கு எலும்பில்லாதது இயற்கையின் குறை! படைப்பின் விசித்திரம் ஆதலால், எலும்பு இல்லாத புழுவைக் கதிரவன் காய்தல் நீதியுமன்று; நெறியுமன்று.


ஆனால், வினைப்பயனில் நம்பிக்கை உடையவர்கள், உயிர்க்குப் புழுப் பிறப்புக் கிடைத்தது அதற்கு ஒரு வகையான தண்டனை என்று கூறினாலும் கூறலாம். ஆனால், அப்பரடிகள் வாக்குப்படி பார்த்தால் அது புண்ணியப்பிறவி என்று கூறப்படும். மனிதனிடத்தில் இருக்கும் கெட்ட குணமாகிய ஆங்காரம் புழுவினிடத்தில் இல்லையெனத் தெரிகிறது. புண்ணியத்தின் பயன் என்னவோ? என்பில்லாத புழுவை வெயில் சுடுவதைப் போல அன்பில்லாத மனிதனை அறக்கடவுள் சுடும். இன்று உலகியலில் எலும்பில்லாத மனிதன் என்று கோழையை அழைக்கின்றனர்.