பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

327


கோடியில் ஒருவருக்கே சாலும். அது பொது விதியல்ல. மேலும் பழமொழியின் நுண்பொருள், "வறுமை நிலையில் வாடாமல் செல்வம் காண முயற்சி செய்க" என்பதேயாகும். அன்பிற்கும் அறத்திற்கும் துணை செய்யாத வறுமையுடைய ஒருவனை சமூகம் உறவு கொண்டாடாது. பிறப்பினால் உறவினராயினும் அது அவர்களுக்கு நினைவிருக்காது; மறந்து விடுவார்கள், வறியன் எடுத்துக் கூறினாலும் "அப்படியா?” என்று பார்த்தும் பாராமலும் கேட்பார்கள். மற்றவர்கள் மட்டுமா? ஏன், ஈன்ற தாயின் கதி என்ன? உலகில் தாயன்பே தலையன்பு. ஈரைந்து திங்கள் சுமந்து, ஈன்று புறந்தந்து, எடுத்து மகிழ்ந்து விளையாடி, பாலூட்டிச் சீராட்டி, நோய்க்குத் தானே மருந்துண்டு வளர்த்த தாயாயினும் வளர்ந்துவிட்ட போது, வறுமையில் வாடுவானாகில் மகவெனப் பார்க்க மாட்டாள். அந்தப் பரிவும் பாசமும் பறந்தோடிப் போகும். அந்நியனைப்போல் பார்ப்பாள். என்னே! வறுமையின் கொடுமை! ஐயாகோ பரிதாபம்! குழைந்த தாயன்பையும் கொலை செய்யும் வறுமையின் கொடுமை சொல்லுந்தரத்ததன்று. நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும்.

உடலிடைத் தங்கி வாழும் உயிர்கள் தாம் துய்த்தலுக்குரிய பொருள்களைப் பெறாதபோது முற்றத் துறந்துவிடுதல் நல்லது அங்ஙனம் துறவாமல் வாழ்தல் பிறர் வீட்டுப் பானையிலிருக்கும் உப்புக்கும் கூழுக்கும் பகையாகி, அவ்வழி அந்த இல்லில் வாழுவோரையும் பட்டினி போட்டுச் சாகடிப்பதாக முடியும். வறுமை வந்துற்றும், மானத்திற்கு இடையூறு வாராதிருப்பதால் மானம் போற்றும் அடிப் படையில் துறந்து விடுதல் நல்லது. வறுமை வந்துற்ற பொழுதே ஒரளவு துறவு வந்துவிட்டது. காரணம் சுற்றத்தார்கள் இவரைத் துறந்து வெளியேறி விட்டனர். இங்குத் துறவு என்று குறிப்பிடுவது தன்னுடைய இச்சைகளைத் துறத்தலேயாகும். இச்சைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகத் துறத்தலோ அல்லது ஒன்றினைத் துறந்து