பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சூட்டிக்கொண்டு வருகின்ற பாவி என்றே அழைக்கின்றார். வறுமை இந்த உலகில் துய்த்து மகிழும் இன்பத்தையும் கெடுக்கிறது. சரி, பரவாயில்லை! அடுத்த உலகமாகிய அமரர் உலகத்திலாவது இடம் கிடைக்குமா என்று கேட்டால் அதுவும் கிடைக்காது. அந்த உலகத்தினைப் பெற அருளை, அறத்தினை, தூய்மையினை விலையாகத் தர வேண்டும். இந்த மூன்றையும்தான் வறுமை கெடுத்து விடுகிறதே! ஆதலால் அந்த உலகமும் இல்லை. வறுமையின் காரணமாகத் துறந்தால் துறவின் மூலம் வறுமையை மாற்றிக் கொள்ளவே முயலுவர். இத்தகு மனப்போக்கினாலேயே துறவுநிலை இடங்களிலும் பொருட்சார்பு மிகுந்தன போலும்! வறுமையின் காரணமாகத் துறக்காமல், வறுமையின் கொடுமை நிலை அறிந்து துய்ப்பனவற்றிற்கும் எல்லையின்மை அறிந்து எண்ணித்தொலையாத கடல் அலைகள் போல் எற்றிஎற்றி வந்துறும் ஆசை அலைகளின் அவலநிலை அறிந்து வறுமையை மாற்றிக்கொள்ளும் நோக்கின்றி, சிந்தை நிறைவு பெறும் நோக்கத்தோடு துறக்கும் துறவு சீலம் நிறைந்த துறவு. இத்துறவு நிலை ஓட்டையும், செம்பொன்னையும் ஒக்கவே பார்க்கும் உணர்வினைத் தரும்; நோதலும் தணிதலும் இல்லை. இத்துறவினையுடையார் பிறர் மகிழ மகிழ்வர். இந்தப் பேரறம் செய்வதால் அவ்வுலகம் கிடைக்கும். ஆதலால் துய்த்து மகிழ்ந்து தெவிட்டிய நிலையில் திருவருளை நாடுதல் முறையான வாழ்க்கை, இயற்கைப் பரிணாம வளர்ச்சியும் கூட முறையாக உழைத்து, நிறை பொருள் குவித்து, துய்ப்பித்தும், துய்த்தும், மிகிழ்வித்தும், மிகிழ்ந்தும் வாழ்தல் மாந்தர் கடமை. வறுமை இயற்கை அன்று; செயற்கையே. மனிதனின் சுயநலமும் சோம்பலும் படைத்ததே வறுமை. எழுக! தளராது முயற்சி செய்க! வறுமையினை வையகத்தை விட்டு விலக்குக! வாழ்வாங்கு வாழ்க! இதுவே வள்ளுவத்தின் வழி!