பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

333


வரலாம். ஆயினும் இரப்பார்க் கொன்றிவார் புகழே, புகழெனத் தக்கது. இந்தப் புகழை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்போர், இரப்போரேயாம். இத்தகு இரப்போரில்லை யாயின் ஒருவருக்கு ஏது புகழ்: ஒருவன் இரந்து கேட்பதோ, சில நாளில் சம்பாதித்த பொருள். ஆனால் அவன் திரும்பத் தருவதோ உலகளாவி நிலைத்திருக்கும் புகழ். இரப்பவன் கேட்டுப் பெறுவதோ இந்த உலகில் அழித்தால் அழியக்கூடிய பொருள். ஆனால் அவன் திரும்பத் தருவதோ அழிவில்லாத அருட்பேறு. இந்த உலகியல் வாழ்க்கை உணர்ச்சியும், சுவையும் நிறைந்ததாக இருக்க வேண்டும். வற்றி வறண்ட வெறிச்சோடிப் போன பாலைவனமாக்க காட்சியளிக்கக் கூடாது. இந்த வாழ்க்கையின் சிறந்த சீலம், கொண்டும் கொடுத்தும் மகிழ்ந்து வாழ்தலேயாகும். கொடுப்பதற்கு வாங்குவோரில்லையானால் வாழ்க்கை உயிர் வாழ்க்கையா? அது மரப்பாவை வாழ்க்கையாகும்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று

என்பது குறள்.

திருவள்ளுவர் மனிதனைப் பார்த்து 'இரவற்க' என்றா. ஆயினும் இயற்கையால் விளைந்த கேடுகளாலும், சமுதாய மாறுபாடுகளாலும் ஒரோவழி இரக்கவேண்டின் "கரவாதவனிடத்தில் இரக்க” என்றார். ஆயினும் இரக்கப்பட்டோன் கொடாத வழி கோபப்பட்ட வேண்டாம் என்றும் கூறுகிறார். இரத்தற்குரிய அவலநிலை வந்தது, முன்னை ஒழுக்கக் கேடுகளாலேயேயாம். நேற்றைய தனது முறையற்ற வாழ்க்கைக்கு இன்றைய வறுமை சாட்சி. கண்முன்னே நேற்றையத் தவறுகளைக் கண்டு அனுபவிக்கும் பொழுதும் மீண்டும் வெகுண்டு தவறு செய்தல், மீளவும் துன்பத்திற்கே ஆளாக்கும். ஆதலால், கொடுக்காதவன் மாட்டுச் சினந்து கொள்ளுதல், அவனைத் தாக்குவதைவிட, உன்னையே வலிமையுடன்